ஜாக் மாவுக்கு நடக்கவே தெரியாது. ஓட்டம்தான். உலக அளவில் போட்டிபோட அலிபாபா கம்பெனியின் தொழில்நுட்பம் போதாது என்பது அவருக்குத் தெரியும். யாஹூவிலிருந்தே இந்தத் திறமையைக் கடத்திக்கொண்டுவர முடிவெடுத்தார். யாஹூவின் டெக்னிக்கல் மூளை ஜான் வூ (John Wu) என்னும் சீனர். அமெரிக்க மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர். ஜாக் மா அமெரிக்கா பறந்தார். ஜன் வூ – வைச் சந்தித்தார். அவர் அலிபாபாவில் சேரச் சம்மதித்தார். ஆனால், அமெரிக்காவைவிட்டு வர அவருக்கு விருப்பமில்லை. நம் தடாலடி மன்னர் உடனேயே சொன்னார், “நீங்கள் சீனா வரவேண்டாம். அலிபாபா உங்களுக்காக அமெரிக்கா வருவார்.” கலிபோர்னியா மாநிலம் ஃப்ரீமான்ட் (Fremont) என்னும் இடத்தில் அலிபாபாவின் ஆய்வு & அபிவிருத்தி மையம் (Research & Development Centre) தொடங்கியது. மாஸாவும், கோல்ட்மேன் ஸாக்ஸும் தந்த பணத்தின் பலம். ஜான் வூ தலைமை. விரைவில் அவர் கீழ் சுமார் முப்பது கம்ப்யூட்டர் திறமைசாலிகள்.
சீனாவிலும், ஹாங்காங்கிலும் அலிபாபா ஏராளமான திறமைசாலிகளுக்குத் தன் கதவுகளைத் திறந்தது. இவர்கள் அறிமுகம் செய்த தொழில்நுட்பங்கள் வாடிக்கையாளர்களை ஈர்த்தன. 188 நாடுகளிலிருந்து 1,50,000 வியாபாரிகள் தங்கள் இணையதளங்களை அலிபாபாவில் பதிவு செய்தார்கள். இந்த உற்சாகத்தால், வருங்காலத்தை ஒளிமயமான எதிர்காலமாக ஜாக் மா கனவுக்கோட்டைகள் கட்டிக்கொண்டிருந்தார். விரைவில் அலிபாபாவின் பங்குகளை அமெரிக்கப் பங்குச் சந்தையில் இறக்கவேண்டும். அந்த ஐ.பி.ஓ – வில் பணம் கொட்டும். அதை வைத்து அமேசானுக்கே சவால் விட வேண்டும்.
சீனாவின் பிற இன்டர்நெட் கம்பெனிகளும் இதே கனவுகளோடு பயணித்துக்கொண்டிருந்தார்கள். MeetChina.com என்னும் ஆன்லைன் நிறுவனம் ஸாஃப்ட் பேங்க் துணையோடு அமெரிக்க ஐ.பி.ஓ – வுக்குத் திட்டமிட்டது. Global Sources என்னும் தொழில் பத்திரிகைகள் வெளியிடும் கம்பெனி கோல்ட்மேன் ஸாக்ஸ் உதவியோடு ஐ.பி.ஓ – வுக்குத் தயாரானது. மூன்று சீனக் கம்பெனிகளும் களத்தில் ஒரே சமயத்தில் இறங்கினால், மூவரின் வெற்றி வாய்ப்புகளும் பாதிக்கப்படும். ஆகவே யார் முதலில் என்று போட்டா போட்டி. அனைத்துத் தரப்பிலும் மும்முரமான முன்னேற்பாடுகள்.
இவர்களின் ஆசை நெருப்பில் நீரூற்ற வந்தது சீன அரசு. இன்டர்நெட் நாட்டுக்கு நல்லதா, இல்லையா என்று கம்யூனிசக் கட்சித் தலைமைக்குள் இரண்டு கருத்துகள். நாட்டின் வறுமை நீங்கவேண்டுமானால், பொருளாதாரம் செழிக்கவேண்டுமானால், இன்டர்நெட்தான் ஒரே வழி என்றது ஒரு அணி. இன்டர்நெட் வந்தால், கம்யூனிசத்துக்கு எதிரான கருத்துகள் பரவி, நாட்டின் அடிப்படை அரசியல் சித்தாந்ததுக்கே உலை வைக்கும் என்றது இன்னொரு அணி. இதனால், சில ஊடகங்கள் இன்டர்நெட்டைச் “சீனாவுக்குக் கடவுளின் பரிசு” என்று வரவேற்றன. இன்னும் சில “சீனாவைத் தகர்க்கும் தகவல் அணுகுண்டு” என்று வர்ணித்துக் கறுப்புக் கொடி காட்டின. ஜாக் மா போன்ற தொழில் முனைவர்களுக்கு ஒரே குழப்பம். அலிபாபாவிலும் மந்த நிலை. சில மாதங்களில் இன்டர்நெட் ஆதரவு அணி வென்றது. தொலைத்தொடர்புக் கட்டமைப்பில் அதிக முதலீடு செய்யவும், ஆன்லைன் கம்பெனிகளுக்கு பக்கபலமாக இருக்கவும் அரசாங்கம் தீர்மானித்தது. வருவேன், வருவேன் என்று பயம் காட்டிய அரசியல் எதிர்ப்பு என்னும் புலி வரவில்லை.
இது சீனப் புலி. அதே சமயம், இன்னொரு அகில உலகப் புலி இன்டர்நெட் உலகில் கிலியை ஏற்படுத்திக்கொண்டிருந்தது – Y2K.
Y2K என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? கம்ப்யூட்டர் புரோக்ராம்களில் ஆண்டினைக் குறிக்கையில் முதல் இரண்டு இலக்கங்களான 19 என்பதை நிலையாக எடுத்துக்கொண்டு அடுத்த இரண்டு எண்களை மட்டுமே குறிப்பது வழக்கம். அதாவது, 1999 – ஐ, வெறும் 99 என்று மட்டுமே போடுவார்கள். 99 என்று போட்டால் அதை 1999 என்று கம்ப்யூட்டர் கரெக்டாக அடையாளம் கண்டுகொள்ளும். 1999 – ஆம் ஆண்டு வரை இந்தக் குறியீட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
2000 – ஆம் ஆண்டு பிறக்கும்போது என்ன நடக்கும் என்று ஒரு கம்ப்யூட்டர் நிபுணர் ஆலோசித்தார். திடுக். வழக்கம்போல் 00 என்று போட்டால், கம்ப்யூட்டர் அதை 2000 – ஆம் ஆண்டு என்று எடுத்துக்கொள்ளுமா, அல்லது 1900 என்றா? 1900 – க்கும், 2000 – க்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கக் கம்ப்யூட்டருக்குத் தெரியாதே?
இந்தத் தவறுக்கு ஒய் 2 கே என்று பெயர் வைத்தார்கள். ஏன்? ஒய் என்றால் ஆங்கில Y. Year என்ற சொல்லின் முதல் எழுத்து.
ஆயிரத்தைக் குறிக்க “கே” என்ற வார்த்தை இளைஞர் இளைஞிகளிடையே பிரபலம். பி. பி. ஓ க்களில் வேலை பார்க்கும் இளசுகள் தங்கள் சம்பளம் பற்றி எப்படிப் பேசிக் கொள்வார்கள் தெரியுமா?
“மச்சி, என்னடா சம்பளம் வாங்குறே?”
“டுவென்ட்டி கே.”
அப்படியென்றால் 20 ஆயிரம். கே என்றால் ஆயிரம், ஒய் 2 கே என்றால் 2000 – ஆம் ஆண்டு. கம்ப்யூட்டரில் ஏற்படும் இருபதாம் நூற்றாண்டுப் பிழை ஒய் 2 கே என்று அழைக்கப்பட்டது.
என்ன இது பெரிய விஷயம் என்று நினைக்காதீர்கள். சாதாரணமாகப் புத்தாண்டு பிறக்கப் போகிறதென்றால் இரவு மணி பன்னிரண்டு அடிக்கும்போது, “ஹலோ, ஹாப்பி நியூ ஈயர்” ,என்று வாழ்த்துச் சொல்ல உலகம் காத்திருக்கும்.
ஆனால் 2000 – த்தின் விடியப்போகும் புத்தாண்டை நினைத்து எல்லோரும் பயந்தார்கள். . வங்கிகள், அரசு ஆவணங்கள், விமானங்கள், ரெயில்கள், ஆகியவை கம்ப்யூட்டர் கணக்குகளின் அடிப்படையில் இயங்குபவை. ஜனவரி 1 முதல், கம்ப்யூட்டர்கள் 1900 – ஆ, 2000 – மா என்று குழம்பும்.
நீங்கள் 1950 – இல் பிறந்தவர். உங்கள் இருபதாம் வயதில் வங்கிக் கணக்கு தொடங்குகிறீர்கள். 1999 டிசம்பர் 31 – ஆம் தேதி உங்கள் அக்கவுண்டில் இரண்டு லட்சம் ரூபாய் இருக்கிறது. அடுத்த நாள் காலை ஜனவரி 1, 2000. வங்கிக்குப் போகிறீர்கள். பணம் எடுக்க செக் கொடுக்கிறீர்கள். வங்கிக் கம்ப்யூட்டர் சொல்கிறது உங்களுக்கு வங்கியில் அக்கவுண்டே இல்லை என்று. வங்கியா கம்ப்யூட்டரா, யார் தில்லுமுல்லு செய்கிறார்கள்?
இரண்டு பேருமேயில்லை. ஒய் 2 கே செய்யும் சில்மிஷம் இது. 2000 – ஆம் வருடத்துக்கு வங்கியின் உதவியாளர் “00” போடுகிறார். கம்ப்யூட்டர் 1900 என இந்தக் கட்டளையை இனம் காண்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். 1900 – த்தில்தான் நீங்கள் பிறக்கவே இல்லையே? உங்களுக்கு எப்படி அக்கவுண்ட் இருக்கும்? எனவே கம்ப்யூட்டர் உங்களுக்கு வங்கியில் பணமே இல்லையென்று காட்டும்.
ஒய் 2 கே பிழையைத் திருத்தாவிட்டால் மின்சார சப்ளை நிற்கும், உலகமே இருளில் மூழ்கும், வங்கிகள், விமானங்கள், ரெயில்கள் ஆகிய சேவைகள் தடுமாறும், ஸ்தம்பிக்கும். உலகம் முழுக்க பயம், பயம். ஆன்லைன் பிசினஸ்களின் ஜீவநாடி கம்ப்யூட்டர். ஆகவே, அமேசான், ஈ பே போன்ற நிறுவனங்களில் என்ன நடக்குமோ என்று திக் திக். இவர்களைப் போலவே ஜாக் மாவும் அலிபாபா தொடங்கிய ஒரே வருடத்தில் மூடுவிழா நடத்தவேண்டுமோ என்று பயந்தார். நியாயமான பயம்.
அமெரிக்காவிலும், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் சர்வம் கம்ப்யூட்டர் மயம். எனவே கம்ப்யூட்டர்களையும் அவற்றின் பயன்பாட்டு நிரல்களையும் மேம்படுத்தி ஒய் 2 கே (2000 – ஆம் ஆண்டு) க்கு இசைந்தவையாக மாற்றுவதற்கு இந்த நாடுகள் போர்க்கால நடவடிக்கைகள் எடுத்தன. மொத்தச் செலவு 300 பில்லியன் டாலர்கள். அதாவது, அன்றைய மதிப்பில் பதினெட்டு லட்சத்து எழுபத்து ஏழாயிரம் கோடி ரூபாய்! .
டிசம்பர் 31, 1999 இரவு மணி 12. இருபதாம் நூற்றாண்டு பிறந்தது. கடவுளை வேண்டிக்கொண்டே, எல்லோரும் கம்ப்யூட்டரை திறந்தார்கள். ப்ரோக்ராம்கள் வழக்கம்போல் வேலை செய்தன. யாரோ எறும்பை ஏரோப்ளேன் ஆக்கிவிட்டார்கள் என்று உலகம் உணர்ந்தது. Y2K என்னும் இரண்டாவது புலியும் வரவில்லை. உலகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.
இப்போது, அமெரிக்கப் பங்குச் சந்தையிலிருந்து இன்னொரு “புலி வருது” மிரட்டல். ஏற்கெனவே இரண்டு வெத்துவேட்டுப் புலி மிரட்டல்களைச் சந்தித்துவிட்ட ஜாக் மா மட்டுமல்ல, எல்லோருமே நினைத்தார்கள், இந்தப் புலியும் வராது.
(குகை இன்னும் திறக்கும்)