ஆளுநருக்கு எதிராக போராடினால் 7 ஆண்டு சிறை என்பது மிரட்டும் வகையில் உள்ளது என அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
கரூர் தாந்தோணிமலையில் நேற்று கட்சிக் கொடியை ஏற்றி வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

ஆளுநரை எதிர்த்து போராடினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது, இது ஜனநாயக நாடா, ராணுவ ஆட்சி நடக்கிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஆளுநரை எதிர்த்து போராடினால் வழக்கு தொடரலாம். 7 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது போராடுபவர்களை மிரட்டும் வகையில் உள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு அல்லது சுற்றுப்பயணம் செய்வது ஏற்புடையதல்ல. மேலும், ஆளுநர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் அவரே விசாரணை கமிஷன் அமைத்தார். இதற்கு முன் இருந்த ஆளுநர்கள் யாரும் இவர் போல செயல்பட்டதில்லை.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் ஒரு நபர் ஆணையமோ, முதல்வரின் கீழ் வரும் சிபிசிஐடியோ விசாரிப்பதைவிட சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும்.
இயக்குநர்கள் பாரதிராஜா, கவுதமன் உட்பட போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு தொடர்வது, கைது செய்யப்படுவது அடக்குமுறையாகும். அரசுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என நினைக்கின்றனர் என்றார்.