ஆளும் பாஜகவில் இணைந்த குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ: அமைச்சராக பதவியேற்பு

குஜராத் மாநிலம் ஜஸ்தன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கன்வர்ஜி பவாலியா. கோலி இனத்தைச் சேர்ந்த முக்கிய தலைவரான இவரை, காங்கிரஸ் மேலிடம் தொடர்ந்து புறக்கணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்நிலையில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த கன்வர்ஜி, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜக மாநிலத் தலைவர் ஜித்து வஹானி முன்னிலையில் அக்கட்சியில் நேற்று இணைந்தார். இந்த நிகழ்ச்சியில், கன்வர்ஜியின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கன்வர்ஜி பவாலியா

இதுகுறித்து அவர் கூறும்போது, “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜாதி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கட்சியின் மூத்த தலைவர்களின் கருத்துகளை அவர் கேட்பதில்லை. இதனால், எனது தொகுதிப் பணிகளில் ஈடுபடுவதிலும் எனக்கு சிக்கல் ஏற்பட்டது. எனவே, வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாஜகவில் இணைந்துள்ளேன்” என்றார்.

இதனிடையே, பாஜகவில் இணைந்துள்ள கன்வாரிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எனினும், அவருக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை.

Leave a comment

Your email address will not be published.