இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி காஷ்மீர்: ஐ.நா. பொது சபை விவாதத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், பாகிஸ்தானின் வெற்று முழக்கங்களால் உண்மையை மாற்ற முடியாது என்றும் ஐ.நா. கூட்டத்தில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

ஐ.நா. பொது சபையில், ‘மனித படுகொலை, போர்க்குற்றம், இன அழிப்பு, மனிதர்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு மற்றும் பாதுகாப்பு’ தொடர்பாக நேற்று முன்தினம் விவாதம் நடைபெற்றது. இதில் ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி பேசும்போது, “காஷ்மீரில் வசிக்கும் மக்கள் அடக்குமுறை மற்றும் கொலை உள்ளிட்ட கொடூர குற்றங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சர்வதேச சமூகம் இந்த விவகாரத்தை ஒருதலைப்பட்சமாக அணுகுகிறது” என்றார்.

அப்போது, ஐ.நா.வுக்கான இந்திய தூதரக அதிகாரி (முதல் செயலாளர்) சந்தீப் குமார் பய்யாபு, பதில் அளிக்கும் உரிமையைப் பயன்படுத்தி பாகிஸ்தான் பிரதிநிதியின் பேச்சுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார்.

பய்யாபு பேசும்போது, “சுமார் 10 ஆண்டுகளில் முதல் முறையாக மிக முக்கியமான பிரச்சினை குறித்து நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநில நிலவரம் பற்றி தேவையற்ற கருத்தை தெரிவிப்பதற்காக பாகிஸ்தான் பிரதிநிதி இந்த மேடையை மீண்டும் தவறாக பயன்படுத்துகிறார்.

இதற்கு முன்பு நடைபெற்ற ஐ.நா. கூட்டங்களில், பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தை பல முறை எழுப்ப முயன்றும் அதில் தோல்வி அடைந்தது. இது விஷயத்தில் எந்த ஒரு நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கவில்லை.

இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் மாற்ற முடியாத பகுதி காஷ்மீர் என்பதை இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பாகிஸ்தானின் வெற்று முழக்கங்களால் உண்மை நிலையை ஒருபோதும் மாற்ற முடியாது” என்றார்.

Leave a comment

Your email address will not be published.