இந்தியாவில் செல்வந்தர்களின் எண்ணிக்கை 2017-ம் ஆண்டில் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக கேப்ஜெமினி ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிக மக்கள் தொகையுடன் உலக அளவில் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருப்பதற்கு ஏற்ப பணக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
பிரான்ஸைச் சேர்ந்த கேப்ஜெமினி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியாவின் செல்வத்தின் பகிர்வு சமூக அளவில் சமமாக இல்லை. ஒரு சிலரிடத்தில் குவிந்து வருகிறது. கடந்த ஆண்டில் செல்வந்தர்களின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரித்து 2.63 லட்சமாக உள்ளனர். இந்த செல்வந்தர்களின் மொத்த சொத்து மதிப்பு 21 சதவீதம் உயர்ந்து 1 லட்சம் கோடி டாலராக உள்ளது. உலக அளவிலான வளர்ச்சியை விட இந்தியாவில் 12% அதிகமாக உள்ளது.

உலக அளவில் மிகப் பெரிய செல்வந்தர்கள் அமெரிக்க, ஜப்பான், ஜெர்மனி நாடுகளில் உள்ளனர். 2017-ம் ஆண்டின் செல்வந்தர்கள் பட்டியலில் இந்தியா 11 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்திய பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1 லட்சம் கோடி டாலராகும்.
இந்தியாவில் பணக்காரர்களின் அதிகரிப்புக்கு, கடந்த ஆண்டில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட எழுச்சி முக்கிய காரணம். மேலும் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பு 4.8 % வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.7 சதவீதமாக வளர்ந்துள்ளது போன்றவையும் காரணமாகும்.
கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தினால் பொருளாதார பாதிப்பு இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இது நிச்சயமற்ற நிலை என ஆய்வு கூறியுள்ளது. பண மதிப்பு நீக்கத்தினால் உருவான தாக்கம் போன்றவற்றையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதிக சேமிப்பு விகிதமும் சொத்து அதிகரிப்புக்கு காரணமாக இருந்துள்ளது.