டெல்லி : உலகிலேயே இந்தியாவில் தான் அதிகளவில் நிலத்தடி நீர் உறுஞ்சப்படுவதாக அதிர்ச்சி கர புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது. அதிகளவு நீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீரில் யுரேனிய கலப்பு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் டுயுக் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு விவரங்கள் சூழல் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இந்தியா முழுவதும் 16 மாநிலங்களில் நிலத்தடி நீரில் உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த தர அளவை விட யுரேனிய செறிவு அதிகமாக இருப்பது தெரியவந்ததுள்ளது. ராஜஸ்தானின் 324 கிணறுகள் மற்றும் குஜராத்தில் மிக அதிக அளவு யுரேனிய அடர்த்தி இருப்பதாக ஆய்வின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான குடிநீரில் ஒரு லிட்டருக்கு 30 மைக்ரோ கிராம் அளவிற்கு யுரேனிய அளவு இருக்கலாம் என்பது உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகளின் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைவிட மிக அதிக அளவு யுரேனிய செறிவு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிக அளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் ராஜஸ்தானின் 3ல் ஒரு கிணறில் யுரேனிய செறிவு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க நிலத்தடி நீர் மட்டம் மிக குறைந்த வரும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில இருப்பது மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஆய்வின்போது தெரியவந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளின் சராசரியில் தமிழகத்தில் 86.1% அளவிற்கு நிலத்தடி நீர் மட்டம் சரிவு கண்டுள்ளது. அடுத்து பஞ்சாபில் 84.6% அளவிற்கு நிலத்தடி நீர் சரிந்துள்ளது. ஆந்திராவில் 75%, உத்தரபிரதேசத்தில் 70.6%, கேரளாவில் 70.1% நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளது. நாட்டில் இருக்கும் கிணறுகளில் ஒட்டுமொத்தமாக 10 ஆண்டுகளில் நிலத்தடி நீர் மட்டம் 60.7% சரிந்துள்ளது.