தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளுக்கு வழக்கு செலவுக்காக ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொழிலதிபர் விஜய் மல்லையா ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவர் மீது வங்கிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. உச்ச நீதிமன்ற உத்தரவின் பெயரில் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கியது.
பல்வேறு கடன்மோசடி வழக்குகளில் விஜய் மல்லையா நேரடியாக ஆஜராகாத காரணத்தால் அவரை தேடப்படும் குற்றவாளியாகவும் நீதிமன்றம் அறிவித்தது. விஜய் மல்லையா லண்டனில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் தற்போது மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி, இங்கிலாந்து நீதீமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகிகள் உலகளாவிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதனை இங்கிலாந்திலும் பதிவு செய்துள்ளது.
சொத்துகளை முடக்கும் உலகளாவிய உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி, இங்கிலாந்து நீதிமன்றத்தில் விஜய் மல்லையா முறையிட்டார். ஆனால், தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. அதோடு விஜய் மல்லையாவிடம் கடனை வசூலிக்க இந்திய வங்கிகளுக்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில், இந்த உலகளாவிய உத்தரவையும், கடன் மீட்பு தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் இங்கிலாந்தில் பதிவு செய்ய வழக்கு செலவுக்காக, இந்திய வங்கிகளுக்கு விஜய் மல்லையா 1 கோடியே 80 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.