இந்தோனீஷியாவில் கடும் நிலநடுக்கம்: குறைந்தது 14 பேர் பலி

இந்தோனீஷியாவின் பிரபல சுற்றலா நகரம் ஒன்றில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 14 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய இந்தோனீஷியாவில் உள்ள லோம்போக் தீவில் இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு பாலியிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள இந்த தீவு உலகம் முழுவதிலிருந்தும் இந்தோனீஷியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு பிடித்தமான இடமாக இருந்து வருகிறது.

இத்தீவில் 6.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பெரிய கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் இதன் காரணமாக சிலர் காயமடைந்ததாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட குழப்பம் குறித்து ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் பேசிய ஒருவர், “நிலநடுக்கம் வலுவானதாக இருந்தது. என் வீட்டில் இருந்த அனைவரும் அச்சமடைந்தனர். அனைவரும் தெருவை நோக்கி ஓடினோம். மின்சாரமும் துண்டிக்கப்பட்டது” என்கிறார்.

வடக்கு லோம்போக்கின் வடகிழக்கு நகரத்தில் அமைந்துள்ள மட்டராம் பகுதியில்தான் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் கூறுகிறது.

இந்தோனீஷியா பேரிடர் முகமையின் செய்தி தொடர்பாளர் சுடோபோ புர்வோ, “கட்டங்கள் இடிவதிலிருந்து தப்ப மக்கள் அனைவரும் வீதியிலும், திறந்தவெளி மைதானங்களிலும் திரள்கின்றனர். மக்களை மீட்பது மற்றும் வெளியேற்றுவதில்தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.” என்று ட்வீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.