இறுதிப்போட்டிக்கு முன்னேறி குரோஷிய அணி புதிய சாதனை

மாஸ்கோ,

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் இரவு மாஸ்கோ நகரில் நடந்த 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, குரோஷியாவை சந்தித்தது. பரபரப்பான இந்த மோதலில் குரோஷிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்துக்கு ‘வேட்டு’ வைத்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இங்கிலாந்து வீரர்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். 5-வது நிமிடத்தில் கிடைத்த ‘பிரிகிக்’ வாய்ப்பில் இங்கிலாந்து வீரர் கீரன் டிரைப்பீர் உதைத்த பந்து அரண் போல் நின்ற வீரர்களை தாண்டி வலையின் கார்னர் பகுதிக்குள் புகுந்து கோலாக மாறியது. பிற்பாதியில் இங்கிலாந்து வீரர்கள் முன்னிலையை தக்கவைக்கும் நோக்கில் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். அதுவே அவர்களுக்கு பாதகமாக அமைந்தது.

பிற்பாதியில் குரோஷிய வீரர்கள் இடைவிடாது தொடுத்த தாக்குதலில் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறிப்போனார்கள். இதனால் குரோஷிய வீரர்களின் ‘பிடி’ மேலோங்கியது. 68-வது நிமிடத்தில் குரோஷியாவின் வர்சல்ஜ்கோ அடித்த பந்தை, இங்கிலாந்தின் கைல் வால்க்கர் தலையால் முட்டுவதற்கு பாய்ந்தார். அதற்குள் மற்றொரு குரோஷிய வீரர் இவான் பெரிசிச் தனது காலை அவரது தலைக்கு மேலாக தூக்கிசென்று பந்தை வலைக்குள் அடித்து அமர்க்களப்படுத்தினார். வழக்கமான 90 நிமிடங்களில் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனதால் கூடுதல் நேரமாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது.

98-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜான் ஸ்டோன்ஸ் அதிவேகமாக தலையால் முட்டிய பந்து கோலாகி இருக்க வேண்டியது. எதிரணி கீப்பரால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில், கம்பத்தின் அருகில் நின்ற குரோஷிய வீரர் வர்சல்ஜ்கோ பந்தை தலையால் முட்டி வெளியே தள்ளி தங்கள் அணியை காப்பாற்றினார். இதைத் தொடர்ந்து 109-வது நிமிடத்தில் பெரிசிச் தலையால் முட்டி கோல்பகுதிக்குள் திருப்பிய பந்தை குரோஷியாவின் மரியோ மான்ட்ஜூகிச் இடது காலால் உதைத்து வலைக்குள் அனுப்பி ஹீரோவாக ஜொலித்தார். அதுவே வெற்றியை நிர்ணயிக்கும் கோலாகவும் அமைந்தது.

இந்த வெற்றியின் மூலம் குரோஷியா சில சாதனைகளை சொந்தமாக்கியது. 1950-ம் ஆண்டு உருகுவேக்கு பிறகு உலக கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சிறிய நாடு குரோஷியா தான். இந்த நாட்டின் மக்கள் தொகை வெறும் 40 லட்சம் தான். உலக தரவரிசையில் 20-வது இடம் வகிக்கும் குரோஷியா, உலக கோப்பை இறுதி சுற்றை அடைந்த குறைந்த தரவரிசையை கொண்ட அணி என்ற சிறப்பையும் பெற்றது.

இந்த தொடரில் 2-வது சுற்றில் டென்மார்க், கால்இறுதியில் ரஷியா, அரைஇறுதியில் இங்கிலாந்து என்று மூன்று நாக்-அவுட் சுற்று ஆட்டங்களிலும் குரோஷிய அணி முதல் கோலை வாங்கிய பிறகு தான் சரிவில் இருந்து மீண்டது. ஒரு உலக கோப்பையில் தொடர்ச்சியாக மூன்று நாக்-அவுட் சுற்று ஆட்டங்களிலும் தொடக்கத்தில் பின்தங்கி பிறகு எழுச்சி பெற்று வெற்றியை ருசித்த முதல் அணி குரோஷியா தான்.

5-வது முறையாக உலக கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ள குரோஷிய அணி நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சை (இரவு 8.30 மணி) எதிர்கொள்கிறது. முன்னதாக நாளை நடக்கும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரைஇறுதியில் தோற்ற பெல்ஜியம்- இங்கிலாந்து அணிகள் (இரவு 7.30 மணி) மோத உள்ளன.

வெற்றிக்கு பிறகு குரோஷிய பயிற்சியாளர் ஜட்கோ டாலிச் கூறுகையில், ‘இறுதிப்போட்டிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்து இருக்கிறோம். களத்தில் எங்களது வீரர்கள் களைப்பில்லாமல் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தியது சிறப்பு வாய்ந்தது. சில வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை இறக்க விரும்பினேன். ஆனால் யாரும் ஓய்வு எடுக்க விரும்பவில்லை. தொடர்ந்து களத்தில் ஓடுவதற்கு ஆர்வமுடன் இருப்பதாக கூறினர். கூடுதல் நேரத்தில் விளையாடுவதற்கும் தயாராகவே இருந்தனர். வீரர்களின் இந்த செயல்பாடு என்னை பெருமிதம் கொள்ள செய்கிறது’ என்றார்.

மேலும் ஜட்கோ டாலிச் கூறுகையில், ‘1998-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் அரைஇறுதியில் பிரான்சுடன் நாங்கள் மோதி அதில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தோம். கடந்த 20 ஆண்டுகளாக இதை பற்றி அடிக்கடி பேசி இருக்கிறோம். இப்போது அந்த தோல்விக்கு பழிவாங்குவது எங்களது நோக்கமல்ல. ஆனால் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு தயாராக வேண்டியது முக்கியம்’ என்றார்.

‘தோல்வி ஏமாற்றம் அளித்தாலும் எங்களது வீரர்கள் விளையாடிய விதம் பெருமை அளிக்கிறது’ என்று இங்கிலாந்து பயிற்சியாளர் காரெத் சவுத்கேட் தெரிவித்தார். ‘இறுதிப்போட்டியை எட்ட முடியாமல் போனது மிகுந்த வேதனையை தருகிறது. நாங்கள் இதில் இருந்து மீண்டு வருவோம். ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி’ என்று இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் குறிப்பிட்டார்.

குரோஷியா கேப்டன் லூக்கா மோட்ரிச் அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்து ஊடகத்தினர், நிபுணர்கள் எங்களது அணியை குறைவாக மதிப்பிட்டு விட்டனர். தொடர்ந்து இரு பெனால்டி ஷூட்-அவுட்டில் விளையாடியதால் நாங்கள் சோர்வடைந்து விட்டதாக கூறினர். அதுவே எங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்தது. நாங்கள் களைத்து போகவில்லை என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறோம். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் இங்கிலாந்துக்கு எதிராக முழுமையாக ஆதிக்கம் செலுத்தினோம்’ என்றார்.

குரோஷிய அணி வெற்றிக்கனியை பறித்த போது, அந்த நாட்டின் பெண் அதிபர் கோலின்டா கிராபர்-கிடாரோவிச் பெல்ஜியத்தில் நடந்து வரும் இரண்டு நாள் ‘நேட்டோ’ உச்சிமாநாட்டில் பங்கேற்று இருந்தார். வெற்றி மகிழ்ச்சியை மற்ற நாட்டு தலைவர்களுடன் பகிர்ந்து கொண்ட அவர், ‘இந்த மாநாடு வெற்றி பெறும், இதே போல் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்’ என்றார்.

கூடுதல் நேரத்தில் குரோஷிய வீரர் மரியோ மான்ட்ஜூகிச் கோல் அடித்ததும் கார்னர் பகுதிக்கு ஓடினார். அவரை பின்தொடர்ந்த மற்ற வீரர்கள் உற்சாகத்தில் அவரை பிடித்து அமுக்கினர். இந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் போட்டோகிராபர் ஒருவர் சிக்கிக்கொண்டார். மெக்சிகோவை சேர்ந்த யுரி கோர்ட்ஸ் என்ற அந்த போட்டோகிராபர் பின்னர் கூறுகையில், ‘வீரர்கள், நான் நின்ற பகுதியை நோக்கி ஓடி வந்த போது நான் லென்ஸ் மாற்றிக்கொண்டு இருந்தேன். மகிழ்ச்சியில் மிதந்த அவர்கள் ஆர்வமிகுதியில் என் மீது விழுந்து விட்டனர். ஆனால் சில வினாடிகளில் நான் அடியில் சிக்கி இருப்பதை உணர்ந்தனர். பிறகு என்னிடம் நலம் விசாரித்தனர். ஒரு வீரர் எனது லென்சை எடுத்து கொடுத்தார். இன்னொரு வீரர் எனக்கு முத்தம் கொடுத்தார்’ என்றார்.

Leave a comment

Your email address will not be published.