உங்கள் எல்லா கனவுகளும் ஒரு நாள் மெய்யாகும் ஐயா !!

👆🏾யார் இவர் .. எப்படி எங்கே பிறந்தார் .. எப்படி வளர்ந்தார் , என்ன சாதித்தார் என்று தெரிந்து கொள்ளும் பொழுதே , நமக்குள் ஒரு கனவு தானாக பூக்க செய்தார் !
அவர் ஜனாதிபதி யாக பதவியேற்ற தினம் , ஏதோ ஒரு நெருங்கிய உறவினர் ஜனாதிபதி ஆனது போல் ஒரு உணர்வு …

” அக்னி சிறகுகள் ” வாங்கி படித்தது கல்லூரி நாட்களில் செய்த ஒரு சில உருப்படிகளில் ஒன்று … அவர் கல்லூரி வாசலை கடந்து செல்ல இருக்கிறார் என்பதை தெரிந்து , கூட்டத்தோடு கூட்டமாக முண்டி அடித்து , நொடியில் கடந்து சென்ற, அந்த வெள்ளை பட்டு தலை யை பார்த்து ஆர்பரித்தது தான் கண்கள் நேரில் பார்த்த ஒரே அனுபவம் !

காமராஜர் க்கு அடுத்து இளைஞர்களை இந்தளவு அரசியலில் யாரும் கவர்ந்தது இல்லை என்பது தான் உண்மை.. கவர்ந்ததே இல்லை என்று கூட சொல்லலாம் … முரண் என்னவென்றால் ,இந்த நிலை மாற வேண்டிதான் அவரின் ஒவ்வொரு உரையும் இருந்திருக்கிறது !

எல்லா மனிதர்களுக்கும் மரணம் உண்டு என்பதை ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது … கலாம் ஏதாவது ஒரு பள்ளி கல்லூரியில் உரை நிகழ்த்துவார் என்றே தோன்றுகிறது … ஊழல் , பேதங்கள் , அவலங்களை தாண்டி இன்றைய காலகட்டத்திலும் அவர் விதைத்த நம்பிக்கை விதைகள் தான் நாளைய சமுதாயத்துக்கு ஒரு ஒளிவிளக்கு என்று சொன்னால் அது மிகையல்ல ! அப்படி விதைகள் தூவியபடியே அவர் உயிர் பிரிந்து, இறைவன் இட்ட பணியை கடைசி நொடி வரை செவ்வனே செய்து முடித்தார் !!

ஒரு மனிதனின் வாழ்வு தான் அடுத்தவருக்கு ஆசை பொறாமை உண்டு பண்ணும், ஆனால் ஒரு மனிதரின் சாவே பொறாமை உண்டு பண்ணியது இவர் இழப்பில் தான்… செத்தா இப்படி தான் சாகனும் என்று நினைத்தவர்கள் ஏராளம்… தெருக்கு தெருக்கு மக்கள் செலவில் அஞ்சலி கூட்டங்கள்.. ஒவ்வொரு பள்ளி கல்லூரியிலும் அவரை பற்றி கூட்டங்கள்… ஆட்டோ சங்கங்கள் சில ஒரு நாள் இலவச ஆட்டோ ஓட்டினது வரை எத்தனை எத்தனையோ. அவர் இறந்த பின் நாடெங்கும் அடித்த அதிர்வலை மற்றும் நன்றி அலை வேறெந்த மனிதருக்கும் சம காலத்தில் கிடைக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை …நம் நாட்டு நிலையும் அதுவே !

அவரின் ஒரு பேட்டியில் , மிகவும் பிடித்த பாடல் பற்றி கேள்வி எழுந்த பொழுது , அவர் சொன்ன பாடல் –
” உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் , உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் !”
அப்படியே வாழ்ந்தும் சென்றார் !

அவர் கடைசி உரை – ” Livable Planet Earth” …
அவர் விட்டு சென்ற கடைசி செய்தி கூட , இந்த பெருமை மிகு தமிழன், இந்த உலகத்துக்கு விட்டுச்சென்ற மிக மிக அத்தியாவசியமான எச்சரிக்கை !!

உங்கள் எல்லா கனவுகளும் ஒரு நாள் மெய்யாகும் ஐயா !!🌐