உச்ச நீதிமன்றம் தெரிவித்த கண்டனத்தைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களான வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றைக் கண்காணிக்கும் சமூக ஊடக தகவல் தொடர்பு மையம் அமைக்கும் திட்டத்தை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது
சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றைக் கண்காணிக்க, சமூக ஊடகத் தகவல் மையம் அமைக்க மத்திய அரசின் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சமீபத்தில் முடிவு செய்தது.
இதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ மெகுல் மொய்திரா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அவர் கூறுகையில், ”சமூக ஊடகங்களைக் கண்காணிக்க மத்திய அரசு அமைக்கும் அமைப்பு என்பது தனி மனிதர்களின் உரிமையில் தலையிடும் செயலாகும். மக்கள் ஒருவொருக்கொருவர் அனுப்பும் தகவல்கள், செய்திகள் ஆகியவற்றைக் கண்காணிக்கவும், பதிவு செய்யவும் இதன் மூலம் முடியும்.
வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், இ-மெயில், ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றை 360 டிகிரி கோணத்தில் எப்போதும் கண்காணிப்பில் வைத்திருக்க முடியும். ஆதலால் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் இந்தத் திட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள பேச்சு சுதந்திரம், அந்தரங்க உரிமை ஆகியவற்றைப் பறிக்கும் செயல்” என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக அந்த அமைப்பை உருவாக்குவதற்கான ஏலத்தை நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் கடந்த ஜூலை 13-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசை நீதிபதிகள் கடுமையாகச் சாடினர்.
நாட்டு மக்கள் அனைவரையும் உங்கள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டீர்களா? மத்திய அரசு உருவாக்கும் சமூக ஊடக தொடர்பு மையம் மூலம் மக்களின் தகவல்கள், செய்திகள் அனைத்தையும் பதிவு செய்து கண்காணிப்பில் வைக்கப்போகிறதா? நாட்டைக் கண்காணிப்புக்குள் கொண்டுவருவதே மத்திய அரசின் நோக்கமாக இருக்கிறது என்று காட்டமாகத் தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக அடுத்த 2 வாரங்களுக்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தனர். மேலும், ஏலம் தொடங்குவதற்குள் மீண்டும் விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ”சமூக ஊடகங்களைக் கண்காணிக்கும் கொள்கையை மறு பரிசீலனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்தத் திட்டத்தையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. ஆதலால், ஆன்லைனில் மக்களைக் கண்காணிக்கும் திட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்யலாம்” எனக் கேட்டுக்கொண்டார்.