“உடையவே உடையாத ஸ்க்ரீன்!” – சாம்சங்கின் `இரும்புத்திரை’ மொபைல்

``உடையவே உடையாத ஸ்க்ரீன்!” - சாம்சங்கின் `இரும்புத்திரை' மொபைல்

நமக்குத் தெரிந்து உடையாத டிஸ்ப்ளேவைக் கொண்ட ஒரு மொபைல் இருக்குமென்றால் அது பழைய நோக்கியா 1100 தான். அதுதான் எத்தனை தடவை கீழே போட்டாலும் அசைந்து கொடுக்காமல் அப்படியே இருக்கும். ஆனால், என்றைக்கு டச் ஸ்க்ரீன் மொபைல்கள் வர ஆரம்பித்ததோ அப்பொழுதே டிஸ்ப்ளேவின் மேல் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாகி விட்டது. தொடக்கத்தில் சிறியதாக இருந்த டிஸ்ப்ளேவின் அளவும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதேபோல அதைப் பாதுகாக்கவும் அவசியம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. ஸ்க்ரீன் கார்டுகள், டெம்பர்டு கிளாஸ் என எதைப் பயன்படுத்தினாலும் டிஸ்ப்ளே உடைவதை முழுமையாகத் தடுக்க முடிவதில்லை. ஆனால், இனிமேல் டிஸ்ப்ளேவைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை என்கிறது சாம்சங்.

உடையாத டிஸ்ப்ளேவை உருவாக்கவே முடியாதா ?

இதுவரை உடையாத டிஸ்ப்ளேவை உருவாக்கும் தொழில்நுட்பம் எந்த நிறுவனத்திடமும் கிடையாது. மொபைலில் இருக்கும் அனைத்து டிஸ்ப்ளேகளும் உடையும் தன்மை கொண்டதுதான். தற்பொழுது பெரும்பான்மையான மொபைல் நிறுவனங்கள் கொரில்லா கிளாஸ் தொழில்நுட்பத்தைத்தான் நம்பியிருக்கின்றன. அவை வலுவூட்டப்பட்ட கண்ணாடியாக இருப்பதால் இதன் மூலமாகப் பாதிப்பை பெருமளவுக்குக் குறைக்க முடிகிறது. அதுவும் உறுதியாகக் கூற முடியாது. மொபைல் கீழே விழும்போது டிஸ்ப்ளே அதிகமாகப் பாதிக்கப்படுவதன் காரணம் என்னவென்று பார்த்தால் மொபைல் டிஸ்ப்ளேவோ அல்லது பாதுகாப்புக்காகப் பயன்படுத்தும் பொருள்களும் அதிர்வைச் சரியாகக் கடத்துவதில்லை. அதிர்வைக் குறைத்து, பொருளின் பரப்பில் சமமாகப் பரவச் செய்துவிட்டால் பாதிப்பைக் குறைத்து விடலாம். அப்படி ஒரு டிஸ்ப்ளேவை உருவாக்கி அதில் வெற்றிபெற்றிருக்கிறது சாம்சங்.

சாம்சங் டிஸ்ப்ளே

உலக அளவில் மொபைல்களுக்கான டிஸ்ப்ளேகளைத் தயாரிப்பதில் முன்னிலையில் இருக்கிறது சாம்சங் நிறுவனம். எப்பொழுதும் எலியும் பூனையுமாகச் சண்டை போட்டுத் திரியும் ஆப்பிளும், சாம்சங்கும் கட்டி அனைத்துக் கொள்வது டிஸ்ப்ளே விஷயத்தில்தான். ஆப்பிள் தனது ஐபோன்களில் சாம்சங்கின் டிஸ்ப்ளேவைப் பயன்படுத்துகிறது என்பது ஆச்சர்யமான விஷயம். ஏற்கெனவே தனது ஸ்மார்ட்போன்களில் எட்ஜ் டிஸ்ப்ளே,  OLED எனப் பல வகைகளைப் பயன்படுத்தி வரும் நிலையில்  சாம்சங் புதிதாகக் கண்டுபிடித்திருப்பது வளையும் திறன் கொண்ட உடையாத டிஸ்ப்ளேவை.

இந்தப் புதிய வகை  OLED டிஸ்ப்ளே நெகிழும் தன்மை கொண்டது. இது பிளாஸ்டிக் மூலக்கூறுகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. வழக்கமாகத் திரையைப் பாதுகாக்கக் கண்ணாடி பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், இதில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கண்ணாடியால் ஓரளவுக்கு மேல் தாக்கத்தைத் தாங்க முடியாது. ஆனால், பிளாஸ்டிக் நெகிழும் தன்மை கொண்டதால் அதிக அளவு தாக்கத்தைக் கூடத் தாங்கும்.

 

அமெரிக்காவில் இருக்கும் Underwriters Laboratories என்ற நிறுவனத்தில் இந்த டிஸ்ப்ளேவைப் பரிசோதனை செய்திருக்கிறார்கள். இந்த நிறுவனம் பாதுகாப்பு பரிசோதனைகளுக்குப் புகழ்பெற்ற நிறுவனம். அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் ராணுவ தர நிர்ணய அளவுகளின் கீழ் இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 1.2 மீட்டர் உயரத்திலிருந்து 26 தடவை கீழே போட்ட பிறகும் இதற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. தர நிர்ணய அளவுகளின்படி இருப்பதிலேயே அதிகமான உயரமான 1.8 மீட்டர் உயரத்திலிருந்து நடத்தப்பட்ட பரிசோதனையிலும் வெற்றிகரமாக பாஸ் செய்திருக்கிறது. 

பரிசோதனை

இதன் எடை குறைவு என்பதால் மொபைலின் எடையும் குறையும். முன்பை விடக் குறைவான தடிமனில் ஸ்மார்ட்போன்களை உருவாக்க முடியும். அடுத்த வருடம் சாம்சங் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படும் வளையும் திரை கொண்ட ஸ்மார்ட்போனில் இந்த டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடும் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published.