உயிரைப் பறிக்கும் கல்லீரல் அழற்சி… தேவை, அக்கறை!

“கல்லீரல் பாதிப்பால் முதலில் என் தம்பியை இழந்தேன். என் கண் முன்னே கல்லீரல் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வந்த பலரும் தொடர்ச்சியாக இறப்பதைப் பார்த்தேன். நானே நேரடியாகவும் பாதிக்கப்பட்டேன். என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது புரியாமல் ஒரு கட்டத்தில் திகைத்துப் போனேன். `கல்லீரல் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும்’ என எனக்குள் நான் செய்துகொண்ட சபதம்தான் `சென்னை லிவர் ஃபவுண்டேஷன்’ ஆரம்பிக்கப்பட்டதற்கான விதை’’ என்கிறார் அதன் நிறுவனர், மருத்துவர் சண்முகம்.

கல்லீரல்

உலகளவில், 32 கோடியே 50 லட்சம் பேர் கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்டுதோறும் 13 லட்சத்து 40 ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போகிறார்கள். இந்தியாவில் மட்டும் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஆண்டுதோறும் 70,000 பேருக்கும் மேல் இறந்து போகிறார்கள். இந்த பாதிப்புக்குக் காரணமாக இருப்பது `ஹெபடைட்டிஸ்’ எனப்படும் கொடிய வைரஸ். இந்தத் தொற்றை ஏற்படுத்த மூல காரணம் இதுதான் என்றாலும், நம் நாட்டில் அதிகமாகியிருக்கும் மதுப்பழக்கம் கல்லீரல் பாதிப்புகளுக்கு முக்கியக் காரணமாகியிருக்கிறது. ஹெபடைட்டிஸில் ஏ, பி, சி, டி, இ என ஐந்து வகையான வைரஸ்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் பி-யும் சி-யும்தான் மிக ஆபத்தானவை. ஹெபடைட்டிஸ் பி வைரஸைக் கண்டுபிடித்த பேராசிரியர் புளூம்பெர்க்கின் (Baruch Samuel Blumberg) பிறந்த தினத்தைத்தான், `உலக கல்லீரல் அழற்சி தின’மாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கிறோம். உலகளவில் பல கோடி பேர் கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களில் 20 சதவிகிதம் பேர் மட்டுமே சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள் என்பது வேதனைக்குரிய ஒன்று. அதன் காரணமாகத்தான் இந்த தினத்தில், உலகளவில் ஏராளமான விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள், முகாம்கள் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் கல்லீரல் குறித்த ஏராளமான விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளையும், இலவச மருத்துவ முகாம்களையும் தொடர்ச்சியாக நடத்திவருகிறார்கள், சென்னை லிவர் ஃபவுண்டேஷனைச் சேர்ந்தவர்கள். நாளை சென்னையிலிருக்கும் பாடியில் பிரமாண்டமான முகாம் நடத்தத் திட்டமிருக்கிறார்கள். அந்த அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து ஸ்டான்லி மருத்துவமனையில் இரைப்பை மற்றும் குடலியல் அறுவைசிகிச்சைத் துறையை உருவாக்கியவரும், ஃபவுண்டேஷனின் நிறுவனருமான மருத்துவர் சண்முகம் விரிவாக விளக்குகிறார்…

முகாம்

“ நானும் ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்றால், கல்லீரல் பாதிப்படைந்து மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டவன்தான். கல்லீரல் பாதிப்பு என்பது ஆரம்பத்திலேயே தெரியாது. 75 சதவிகித பாதிப்புகள் ஏற்பட்ட பின்னர்தான் அதன் அறிகுறிகள் வெளியே தெரியவரும். ஒரு மருத்துவரான எனக்கே அப்படித்தான் தெரியவந்தது. நான் ஸ்டான்லி மருத்துவமனையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் அதிகமான மக்கள் கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்தார்கள். அவர்களில், பலர் இறந்தும் போனார்கள். இதற்காகவே இங்கிலாந்துக்குச் சென்று கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை குறித்து பயிற்சிபெற்று வந்தேன். இந்தியாவிலேயே முதல் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையை செய்தது நான்தான். அது, ஸ்டேன்லி மருத்துவமனையில் 1996 -ம் ஆண்டு நடந்தது.

பெரும்பாலும் ஏழைகள்தான் இது குறித்து அதிக விழிப்புஉணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்காகத் தொடங்கப்பட்டதுதான் `சென்னை லிவர் ஃபவுண்டேஷன்.’ 1998-ம் ஆண்டிலிருந்து எங்கள் அமைப்பு செயல்பட்டுவருகிறது. ஆரம்பத்தில் பெரியளவில் எங்களால் செயல்பட முடியவில்லை. 2012-ம் ஆண்டுக்குப் பிறகு என் மகன் மற்றும் மருத்துவ நண்பர்களின் உதவியோடு மிகப்பெரிய அளவில் செயல்படத் தொடங்கினோம். ஆரம்பத்திலேயே ஹெபடைட்டிஸ் பரிசோதனை செய்து, பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்துவிட்டால் நோய் தீவிரமடைவதற்குள் காப்பாற்றிவிடலாம். அதற்காகவே தமிழ்நாடு முழுக்க கேம்ப் நடத்திவருகிறோம். இந்தச் சோதனைக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும். அதை நாங்கள் இலவசமாகவே செய்கிறோம். தேவையான மருந்துகளைக் குறைந்த விலைக்கு வாங்கிக்கொடுக்கிறோம். கடந்த சில வருடங்களாகத்தான் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ஹெபடைட்டிஸ் தடுப்பூசி போடுகிறார்கள். தேவைப்பட்டால், அதற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு எங்கள் முகாம்களிலேயே தடுப்பூசி போடுகிறோம்.

தகவல்கள்

ஹெச்.ஐ.வி வைரஸ் தொற்றைவிட மிக மோசமான பாதிப்பை உருவாக்குவது ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்று. உலகளவில் மிக அதிகமாகப் பரவியும் வருவது. ஆனால், இதுகுறித்து மக்களிடத்தில் பெரிய விழிப்புஉணர்வு இல்லை. அதை ஏற்படுத்தி மக்களைக் காக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்’’ என்கிறார் மருத்துவர் சண்முகம்.

“தமிழ்நாட்டில் நாங்கள் நடத்திய சர்வேயில், ஹெபடைட்டிஸ் பி, மற்றும் சி வைரஸால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் இ வைரஸ் அசுத்தமான நீர் மற்றும் உணவின் மூலமாகப் பரவக்கூடியது. இந்த இரண்டும் தானாகவே சரியாகிவிடும். பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்தாது. சிலருக்கு மட்டும் கல்லீரல் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில் ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ்கள் அப்படிப்பட்டவை அல்ல. மிக ஆபத்தானவை.

இவை தாயின் மூலமாக குழந்தைக்குப் பரவ வாய்ப்பிருக்கிறது. தவிர, ரத்தத்தின் மூலமாகவும், ஒருவர் பயன்படுத்திய பொருள்களை மற்றவர்கள் பயன்படுத்துவதாலும், பாதுகாப்பற்ற மற்றும் முறையற்ற உடலுறவுகளாலும் பரவுகிறது. ஒருமுறை இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுவிட்டால் அது மீண்டும் உடலைவிட்டுச் செல்லாது. `2030-ம் ஆண்டுக்குள் இந்த வைரஸ் தொற்றை முழுமையாக அழித்துவிட வேண்டும்’ என்பது உலக சுகாதார நிறுவனத்தின் நோக்கமாகும்.

பாதிப்பு

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 95 சதவிகிதம் பேருக்கு தங்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதே தெரிவதில்லை. நாங்கள் முகாம்கள் நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிவித்து, சிகிச்சையும் அளித்துவருகிறோம். கல்லீரல் முழுமையாக கெட்டுப் போன பிறகுதான் இதன் பாதிப்பு வெளியே தெரியவரும். அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே பரிசோதனை செய்துகொள்ளவேண்டியது மிகவும் நல்லது. கல்லீரலைப் பொறுத்தவரை வருமுன் காப்பது மட்டுமே சிறந்தது’’ என்கிறார் சென்னை லிவர் ஃபவுண்டேஷனின் மேனேஜிங் டேரக்டர், மருத்துவர் விவேகானந்தன்.

Leave a comment

Your email address will not be published.