உருகுவே அணியை கரையேற்றுவார்களா லூயிஸ் சுவாரெஸ், எடிசன் கவானி

உருகுவே அணி உலகக் கோப்பை தொடருக்கு 13-வது முறையாக தகுதி பெற்றுள்ளது. 1930-ல் உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்த உருகுவே, 1950-ல் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. அதன் பின்னர் கோப்பையை வெல்ல 68 ஆண்டுகளாக போராடி வருகிறது. எனிம் அந்த அணி கடந்த 10 ஆண்டுகளில் பயிற்சியாளர் ஆஸ்கார் தபரேஸ் வழிகாட்டுதலில் ஒரு நிலையான மற்றும் வளமான காலக்கட்டத்துக்குள் நுழைந்துள்ளது. ரஷ்ய உலகக் கோப்பையில் உருகுவே அணி எளிதான ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் தொடரை நடத்தும் ரஷ்யா, எகிப்து, சவுதி அரேபியா ஆகிய அணிகளும் உள்ளன. நாக் அவுட் சுற்றில் நுழைவதில் உருகுவே அணிக்கு எந்தவித சிரமும் இருக்காது.

நட்சத்திர வீரர்களான லூயிஸ் சுவாரெஸ், எடிசன் கவானி, டிகோ காட்வின், பெர்னாண்டோ முஸ்லெரா ஆகியோர் அணியின் தூண்களாக உள்ளனர். தகுதி சுற்றில் உருகுவே அணி 9 வெற்றி, 4 டிரா, 5 தோல்விகளை பதிவு செய்திருந்தது. உருகுவே அணி எப்போதும் களத்தில் 4-4-2 என்ற வடிவத்திலேயே வீரர்களை களமிறக்கும். இதில் சுவாரெஸ், கவானி சரியான கலவையாக இடம் பெறுவார்கள். அந்த அணிக்கு நடுகளம்தான் சற்று பின்னடைவாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. எனினும் பந்தை விரைவாக கடத்திச் செல்லும் திறன், சிறந்த தடுப்பாட்டம் ஆகியவற்றால் மற்ற விஷயங்களை சரி செய்துகொள்ள முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளது உருகுவே அணி.

அந்த அணியின் கோல் அடிக்கும் எந்திரமாக வர்ணிக்கப்படுபவர் கவானி. தொழில்முறை போட்டிகளில் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணிக்காக விளையாடி வரும் கவானி, உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்டங்களில் 10 கோல்கள் அடித்திருந்தார். மற்றொரு நட்சத்திர வீரரான சுவாரெஸ் கோல்கள் அடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதில் வல்லவர். பார்சிலோனா அணியில் லயோனல் மெஸ்ஸிக்கு உறுதுணையாக இருந்து வரும் சுவாரெஸ் உலகக் கோப்பை தகுதி சுற்றில் 7 கோல்கள் அடிக்க உதவிபுரிந்துள்ளார்.

உலகின் தலை சிறந்த வீரர்களாக கருப்படும் கவானியும், சுவாரெஸூம் வலுவான திறனை களத்தில் வெளிப்படுத்தும் பட்சத்தில் எதிரணியின் தடுப்பு வியூகங்கள் குறித்து உருகுவே அணி அதிகம் பயம் கொள்ளத் தேவை இருக்காது. உருகுவே அணிக்காக சுவாரெஸ் 97 ஆட்டங்களில் 50 கோல்களும், கவானி 100 ஆட்டங்களில் 42 கோல்கள் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுவாரெஸ் உலகக் கோப்பை தொடரில் 5 முறை கோல்கள் அடித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.