உலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டர்: மிச்சிகன் பல்கலை. ஆராய்ச்சியாளர்கள் சாதனை

உலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டரை மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக சிறிய அளவிலான கம்ப்யூட்டரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. 0.3 மி.மீட்டர் நீளமுள்ள இந்த கம்ப்யூட்டரை அவர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். அதாவது ஒரு அரிசியின் தடிமனை விட சிறிய அளவில் இந்த கம்ப்யூட்டர் அமைந்துள்ளது என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித் துள்ளது.

0.3 மில்லிமீட்டர் நீளமுள்ள உலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டர். படத்தில் கம்ப்யூட்டரின் பக்கத்தில் இருப்பது அரிசி.

இதற்கு முன்பு ஐபிஎம் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் 1 மில்லிமீட்டர் நீளமுள்ள சிறிய கம்ப்யூட்டரை தயாரித்திருந்தது. தற்போது அதை விட 0.3 மில்லிமீட்டர் நீளத்தில் இந்த கம்ப்யூட்டரை மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து மிச்சிகன் பல்கலைக்கழக எலக்ட்ரிக்கல் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் பிரிவு பேராசிரியர் டேவிட் பிளாவ் கூறும்போது, “சிறப்பான முறையில் இந்த கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளோம். அதை கம்ப்யூட்டர்கள் என்று அழைக்கலாமா அல்லது வேண்டாமா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அந்த அளவுக்கு சிறப்பான முறையில் கம்ப்யூட்டர் வந்துள்ளதாக அனைவரும் தெரிவிக்கின்றனர்.

கம்ப்யூட்டரின் ரேம், போட்டோவோல்ட்டெய்க், புராசசர்கள், வயர்லெஸ் டிரான்ஸ்மிட்டர்கள், ரிசீவர்கள் என அனைத்தும் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

இந்த கம்ப்யூட்டரானது மிகவும் வளைந்து கொடுக்கக் கூடிய தன்மையுள்ளது. இதை வேறு மாதிரியாகவும் டிசைன் செய்யக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்நோக்கு அம்சத்தில் இந்த கம்ப்யூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மிச்சிகன் பல்கலைக்கழக ரேடியாலஜி மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினீயரிங் துறை பேராசிரியர் கேரி லூக்கர் கூறும்போது, “இந்த வகை கம்ப்யூட்டர் புற்றுநோய் ஆராய்ச்சிக்கும் உதவும். இதில் அமைந்துள்ள டெம்பரேச்சர் சென்சார் மிகவும் சிறிய வகையைச் சேர்ந்தது. இதை எலியின் உடம்பில் பொருத்தி அங்கு புற்றுநோய் செல்கள் வளர்வதை கண்காணிக்க முடியும்” என்றார்.

Leave a comment

Your email address will not be published.