உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2வது முறையாக பிரான்ஸ் சாம்பியன் : பைனலில் குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது : ரூ.256 கோடி முதல் பரிசு

உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் குரோஷியா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரான்ஸ் அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த தொடர், ரஷ்யாவில் கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. மொத்தம் 32 அணிகள் 8 பிரிவுகளாக லீக் சுற்றில் களமிறங்கின. இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ஜெர்மனி லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. நாக் அவுட் சுற்றின் தொடக்கத்திலேயே, கோப்பையை கைப்பற்றும் வாய்ப்புள்ள அணிகளாகக் கணிக்கப்பட்ட அர்ஜென்டினா, போர்ச்சுகல், ஸ்பெயின் நடையைக் கட்டியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குறிப்பாக, உலக அளவில் தலைசிறந்த வீரர்களான லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), முகமது சாலா (எகிப்து) ஆகியோர் தங்களின் முத்திரையை பதிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

ரவுண்ட் ஆப் 16ல் 8 அணிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த சுற்றில் வெற்றி பெற்ற 8 அணிகள் கால் இறுதியில் களமிறங்கின. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில், உருகுவே, ஸ்வீடன், ரஷ்யா அணிகள் தோல்வியைத் தழுவின. அரை இறுதியில் பிரான்ஸ் – பெல்ஜியம், குரோஷியா – இங்கிலாந்து மல்லுக்கட்டின. மிகவும் பரபரப்பாக அமைந்த இந்த 2 ஆட்டங்களில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியையும், குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின. பரபரப்பான பைனல்: கடந்த ஒரு மாத காலமாக கால்பந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்த உலக கோப்பை தொடரின் பைனலில் பிரான்ஸ் – குரோஷியா அணிகள் நேற்று மோதின. மாஸ்கோ, லஸ்னிகி ஸ்டேடியத்தில் இரவு 8.30க்கு தொடங்கிய இந்த போட்டிக்கு முன்பாக நிறைவு விழா நடைபெற்றது. இதில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கைகள் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தின.

பின்னர் தொடங்கிய ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் குரோஷிய வீரர் மரியோ மாண்ட்ஸுகிச் தடுக்க முற்பட்ட பந்து துரதிர்ஷ்டவசமாக ‘சுய கோல்’ ஆக அமைய பிரான்ஸ் அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய குரோஷிய அணிக்கு இவான் பெரிசிச் 28வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்து 1-1 என சமநிலை ஏற்படுத்தினார். ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் பிரான்ஸ் வீரர் கிரீஸ்மேன் கோல் அடிக்க அந்த அணி மீண்டும் முன்னிலை பெற்றது. விறுவிறுப்பான முதல் பாதி ஆட்ட நேர முடிவில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணியின் போக்பா (59’), பாப்பே (65’) ஆகியோர் கோல் அடிக்க அந்த அணி 4-1 என முன்னிலையை அதிகரித்தது. 69வது நிமிடத்தில் குரோஷியாவின் மரியோ மாண்ட்ஸுகிச் கோல் அடிக்க பரபரப்பு ஏற்பட்டது.

கடைசி நிமிடம் வரை பரபரப்பாக அமைந்த இப்போட்டியில் பிரான்ஸ் அணி 4-2 என்ற    கோல் கணக்கில் அபாரமாக வென்று 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக அந்த அணி 1998ல் உலக கோப்பையை வென்றிருந்தது. குரோஷியாவின் மரியோ ஓன் கோல் போட்ட நிலையில்பிரான்ஸ் சார்பில்  20 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் பிரான்ஸ் வீரர்களும் அந்நாட்டு ரசிகர்களும் ஆனந்தக் கூத்தாடினர். கடைசி வரை போராடி நூலிழையில் வாய்ப்பை நழுவவிட்ட குரோஷிய வீரர்கள் கண்ணீருடன் விடைபெற்றனர். பரிசு மழை: பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு முதல் பரிசாக ரூ256 கோடி வழங்கப்பட்டது. பைனலில் தோற்று 2வது இடம் பிடித்த குரோஷியா அணிக்கு ரூ188 கோடி கிடைத்தது.

2வது முறையாக…
உலக கோப்பை கால்பந்து தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக பிரேசில் முன்னிலை வகிக்கிறது. அந்த அணி 5 முறை உலக கோப்பையை முத்தமிட்டுள்ளது. ஜெர்மனி, இத்தாலி அணிகள் தலா 4 முறை உலக சாம்பியனாகி உள்ளன. அர்ஜென்டினா, உருகுவே அணிகள் தலா 2 முறை கோப்பையை வென்றுள்ளன. இந்த அணிகளுடன் பிரான்ஸ் அணி நேற்று இணைந்தது. ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் தலா ஒரு முறை உலக கோப்பையை கைப்பற்றி உள்ளன.

தங்க காலணி விருது
ரஷ்யாவில் நடந்த உலக கோப்பை தொடரில் அதிக கோல் அடித்த வீரர்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி கேன் (6 கோல்) தங்க காலணி விருது பெற்றார். பிரான்ஸ் வீரர்கள் கிரீஸ்மேன், கைலியன் பாப்பே, பெல்ஜியம் வீரர் ரோமெலு லூகாகு, கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), டெனிஸ் செரிஷேவ் (ரஷ்யா) ஆகியோர் தலா 4 கோல் அடித்து 2வது இடம் பிடித்தனர்.

ஆட்ட நாயகன்
உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் பைனலில் 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணியின் அந்தோனி கிரீஸ்மேன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். கிரீஸ்மேன் அடித்த பெனால்டி கோல், உலக கோப்பை பைனலில் பெனால்டி மூலம் கிடைத்த 5வது கோல் ஆகும். மொத்தம் 6 பெனால்டி வாய்ப்புகள் கிடைத்த நிலையில் ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே வீணடிக்கப்பட்டது. கடைசியாக கிடைத்த பெனால்டி வாய்ப்பிலும் பிரான்ஸ் அணியே கோல் அடித்திருந்தது. அந்த கோலை நட்சத்திர வீரர் ஜினடின் ஜிடேன் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிர்ஷ்டம் இல்லாத குரோஷியா…
* நேற்றைய பைனலில் பெரும்பாலான நேரம் குரோஷிய அணியே ஆதிக்கம் செலுத்தினாலும், அதிர்ஷ்டம் அந்த அணிக்கு கை கொடுக்கவில்லை. மரியோ ஓன் கோல் போட்டதும், பந்து கையில் பட்டதால் பெனால்டி கொடுக்கப்பட்டதும் அந்த அணிக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்தது.
* குரோஷியா 61 சதவீத நேரமும், பிரான்ஸ் 31% நேரமும் பந்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.
* குரோஷிய அணியின் பாஸ்கள் 83% துல்லியமாக இருந்த நிலையில் பிரான்ஸ் அணியின் பாஸ்கள் 73% துல்லியமாக இருந்தன.
* குரோஷியா தரப்பில் 549 பாஸ்களும், பிரான்ஸ் தரப்பில் 269 பாஸ்களும் செய்யபட்டன.

Leave a comment

Your email address will not be published.