ஊட்டி மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

ஊட்டி மலைப்பாதையில் 150 அடி கிடுகிடு பள்ளத்தில் அரசு பஸ் உருண்டது. இந்த கோர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு மலைப்பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. நேற்றும் காலை முதல் மழை பெய்து கொண்டே இருந்தது.
இந்த நிலையில் நேற்று பகல் 11.15 மணிக்கு ஊட்டியில் இருந்து குன்னூருக்கு அரசு பேருந்து புறப்பட்டது. அதில் சுமார் 36 பயணிகள் இருந்தனர். மந்தாடா அருகே மலைப்பாதையில் பேருந்து சென்று கொண்டிருக்கையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்ததால் தாறுமாறாக ஓடி மலைப்பகுதியில் கவிழ்ந்தது. சுமார் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து சுக்கு நூறாக நொறுங்கியதில், பேருந்தில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பேருந்தின் ஓட்டுநர் பிரகாஷ் (38) மற்றும் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published.