எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு முதலீடு பெற வெளிநாடு செல்வது வெட்கக்கேடு : எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சேலம்: சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு வெளிநாட்டுக்கு முதலீடு பெற செல்வது வெட்கக்கேடானது என சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசினார். சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்து. மேற்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமை வகித்தார். விழாவில் சிலையை திறந்துவைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் நடக்கும் ஆட்சியோ மக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. மக்களை பற்றி கிஞ்சித்தும் சிந்திக்காத ஆட்சிதான் நடக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் என்ன செய்தீர்கள். சேலத்தில் திமுக கொண்டு வந்த திட்டங்கள் குறித்த பட்டியல் இங்கே வாசிக்கப்பட்டது. உங்களால் 2 பாலங்களை தவிர வேறு எதையும் கட்ட முடிந்ததா. அந்த பாலங்களுக்கான பணிகளும் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. கேட்டால், மாவட்டத்தை பிரிக்கிறோம் என்கிறீர்கள். பிரிப்பதை தவிர வேறு எதையும் நீங்கள் உருப்படியாக செய்யவில்லை. மத்தியில் இருப்போர் மாநிலங்களை பிரிக்கிறார்கள். இவர்கள் மாவட்டங்களை பிரிக்கிறார்கள். இதனால் மக்களுக்கு என்ன பலன். இதுதொடர்பாக ஆய்வுப்படுத்தி, முறைப்படுத்தி, மக்களின் கருத்துக்களை கேட்டு பிரித்தால் நல்லது.

வேலூரில் திமுக வெற்றி குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு ஓட்டில் வெற்றி பெற்றாலும் அது வெற்றிதான். 40 தொகுதிகளில் 39 இடங்களில் வெற்றிபெற்றுள்ளோம். நீங்கள் ஒரு தொகுதியில் வெற்றிபெற்றுள்ளீர்கள். இதில், எது பெரியது என்பதை நீங்கள் தான் கூற வேண்டும். இதுகுறித்து கேட்டால், லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தோம். தற்போது, சில ஆயிரங்களில் தானே வெற்றி கிடைத்துள்ளது என தெரிவிக்கின்றனர். நான் கேட்கிறேன், 2016ல் ஜெயலலிதா தலைமையில் தேர்தலை சந்தித்த அதிமுக எங்களை விட 1% வாக்குகள் தானே அதிகம் பெற்றது. அதனை வெற்றி என நீங்கள் ஏற்றுக்கொள்ள வில்லையா. 2016 தேர்தலில் கோயில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 428 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். கரூரில் விஜயபாஸ்கர் 441, பேராவூரணியில் துரைக்கண்ணு 49, ஆவடியில் பாண்டியராஜன் 1395 என்ற ரீதியில் தானே வெற்றிபெற்றார்கள். பவானி, கிணத்துக்கடவு என பல தொகுதிகளில் இதே நிலைதான். அப்போது, உங்களுக்கு மானம், சூடு, சொரணை இல்லையா. இடைத்தேர்தலில் 13 இடங்களில் வெற்றிபெற்றோம். 9 இடங்களில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது. உங்கள் கணக்கு வரும் பொதுத்தேர்தலில் வெட்ட வெளிச்சமாகும்.

ஓராண்டில் நான் என்ன சாதனை செய்தேன் என்று ஊடகங்கள் தொடர்ந்து விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறது. 2016ல் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 89. தற்போது, 100 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் செஞ்சுரி அடித்துள்ளோம். இந்த கணக்கு கூட நீங்கள் போட மாட்டீர்களா. இந்த லட்சணத்தில் முதல்வர் நாளை வெளிநாடு போகிறார். வாழ்த்துக்கள் . எதற்காக இந்த பயணம். வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை கொண்டு வந்து குவிக்கவா. அப்படி வந்தால் மகிழ்ச்சி. இந்த நேரத்தில் நான் ஒன்றை கேட்கிறேன். 2015ல் ஜெயலலிதா முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். அப்போது, 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்ததாக தெரிவித்தார்கள். ஆனால், அந்த முதலீட்டின் மூலம் எந்தெந்த தொழிற்சாலைகள் வந்தது என்றால், பதில் இல்லை. 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்தது என்றார்கள். அந்த முதலீட்டிலும் என்னென்ன பணிகள் நடந்தது என்று கேட்டால், பதில் இல்லை. இதேபோல், ஜெயலலிதா தொடங்கி ஓபிஎஸ், எடப்பாடி வரையிலும் தவறாமல் 110வது விதியின் கீழ் பலகோடி திட்டங்களை அறிவிக்கிறார்கள். இதில், எதாவது ஒரு திட்டம் நிறைவேறியதா என்றால், சத்தியமாக இல்லை.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடி பலகோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நிறைவேற்றுவதாக கூறினார்கள். அந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. இந்த லட்சணத்தில் வெளிநாடு பயணம் செய்கிறார் முதல்வர். இந்தப்பயணம் தமிழ்நாட்டு மக்களை முன்னேற்றுவதற்கா. அல்லது உங்கள் நிதியை அங்கு முதலீடு செய்வதற்கா. மக்களைப் பற்றி இவர்களுக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லை. மத்திய பாஜ அரசு இவர்களுக்கு பக்க பலமாக இருக்கிறது. அவர்கள் எதை கேட்டாலும் இவர்கள் செய்வார்கள். தமிழகத்தில் எந்த உரிமைகளுக்கும் குரல் கொடுக்க மாட்டார்கள். இப்படி, தமிழகத்தை குட்டிச்சுவராக்கும் நிலையே நீடித்து வருகிறது. அதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நான் வரும் வழியில் சேலம் இரும்பாலை தொழிலாளர்கள் என்னை சந்தித்து வரவேற்றனர். உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என கூறியவர்கள், அங்கிருக்கும் பிரச்னையும் எடுத்துக் கூறினர். சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்று சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் திமுக தான் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு அந்த ஆலைக்கு ஆபத்து வந்துள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஒரு கண்டன அறிக்கை கூட விடவில்லை. முதல்வர் நேரடியாக டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்தி தனியாருக்கு விடும் திட்டத்தை தடுத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் அமைச்சர்களையாவது அனுப்பி வைத்திருக்க வேண்டும். எதுவுமே செய்யாமல், வெளிநாட்டு முதலீடுகளை வாங்கி வரச்செல்கிறேன் என்பது மிகவும் வெட்கக் கேடானது. இதற்கு முடிவு கட்ட தயாராகுங்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.🔴