மின்சாரம், இயந்திரம், தொழில்நுட்பம் என எவ்வித உதவியும் இல்லாமல் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு வானத்தில் பறக்கும் ட்ரோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கடந்த வாரம் நடைபெற்ற ஃபர்ன்பாரூவ் இன்டர்நேஷனல் ஏர்ஷோவில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

குறிப்பாக, எவ்வித உதவியும் இல்லாமல் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு 55 முதல் 70 ஆயிரம் அடி உயரத்தில் 50-78 கிலோமீட்டர் வேகத்தில் 15 கிலோ எடையுள்ள கருவிகளை சுமந்துகொண்டு சூரிய ஒளியை பயன்படுத்தி பறக்கும் ட்ரோன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
பிரிட்டனை தலையிடமாக கொண்டு செயல்படும் ப்ரிஸ்மாட்டிக், பிஏஇ சிஸ்டம்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள பாசா-35 என்ற தனது ட்ரோனின் மாதிரியை இந்த கண்காட்சியில் வைத்திருந்தது. “இந்த ட்ரோனை கண்காணிப்பு, தகவல் தொடர்பு, தொலை உணர்வு, சுற்றுச்சூழல் மாறுபாடு போன்றவற்றை கண்காணிப்பதற்கு பயன்படுத்தலாம். இதுபோன்ற மற்ற ட்ரோன்களை ஒப்பிடும்போது இதன் விலை குறைவாக இருக்கும்” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது கட்டமைப்பு நிலையிலேயே இருக்கும் இந்த ட்ரோன் அடுத்த வருடம் சோதனைக்குட்படுத்தப்பட்டு வரும் 2021ஆம் ஆண்டுக்குள் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராக்கெட்டுகள் வழியாக செயற்கோளை விண்ணில் நிலைநிறுத்தும் அதிக செலவுமிக்க தொழில்நுட்பத்தைவிட, இதுபோன்ற ட்ரோன்கள் விலை குறைவானதாகவும், 4ஜி, 5ஜி போன்ற அதிவேக இணையதள பயன்பாட்டை ஊரகப்பகுதிகளில் மேற்கொள்வதற்கு எளிதாகவும் இருக்குமென்று கருதப்படுகிறது.