ஏ பிரிவில் உருகுவே முதலிடம்: ரஷ்ய அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று ஏ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் உருகுவே அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை வீழ்த்தியது. இதன் மூலம் தனது பிரிவில் உருகுவே முதலிடம் பிடித்தது.

ரஷ்யாவின் சமரா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள உருகுவே 3-5-2 என்ற பார்மட்டிலும், 70-வது இடத்தில் உள்ள ரஷ்யா 4-2-3-1 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. இரு அணிகளும் ஏற்கெனவே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்ததால் இந்த ஆட்டம் ஏ பிரிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி எது என்பதை தீர்மானிப்பதாக இருந்தது. 9-வது நிமிடத்தில் உருகுவே வீரர் பென்டன்கரை, பாக்ஸ் பகுதியின் விளிம்பில் வைத்து ரஷ்ய வீரர் யுரி கஸின்ஸ்கி பவுல் செய்தார். இதனால் உருகுவே அணிக்கு ஃப்ரீகிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி லூயிஸ் சுவாரஸ், கோல்கம்பத்தின் வலதுபுறமாக பந்தை திணிக்க 10-வது நிமிடத்திலேயே உருகுவே அணி 1-0 என முன்னிலை பெற்றது.

12-வது நிமித்தில் ரஷ்யாவின் ஆர்டெம் ஸூபா தலையால் முட்டிய பந்தை டெனி செரிஷேவ், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து பெற்று இலக்கை நோக்கி அடித்த நிலையில் உருகுவே கோல்கீப்பர் முஸ்லெராவால் தடுக்கப்பட்டது. 23-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து உதைக்கப்பட்ட பந்தை உருகுவே வீரர் லூக்காஸ் டொரிரா தலையால் முட்டிய நிலையில் விலகிச் சென்ற பந்தை டிகோ லக்சால்ட் இலக்கை நோக்கி வலுவாக அடித்தார். அப்போது ரஷ்ய வீரர் டெனிஸ் செரிஷேவ் தடுக்க முயன்ற போது அவரது காலில் பட்டு ஓன் கோலாக மாறியது.

36-வது நிமிடத்தில் ரஷ்ய வீரர் இகோர் ஸ்மோல்னிகோவ், 2-வது மஞ்சள் அட்டை பெற்றதால் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு ரஷ்யா தள்ளப்பட்டது. முதல் பாதியில் உருகுவே அணி 2-0 என முன்னிலை பெற்றது. 2-வது பாதியிலும் உருகுவே அணியே ஆதிக்கம் செலுத்தியது. 90-வது நிமிடத்தில் இலக்குக்கு மிக அருகில் வைத்து உருகுவே அணியின் எடிசன் கவானி கோல் அடித்து அசத்தினார். கடைசி வரை முயன்றும் ரஷ்ய அணியால் கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் உருகுவே 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 9 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்தது உருகுவே அணி.

எகிப்து தோல்வி

வோல்கோகிராட் மைதானத்தில் ஏ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை இழந்த சவுதி அரேபியா – எகிப்து அணிகள் மோதின. இதில் சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் சல்மான் இரு கோல்ல் அடித்தார். எகிப்து அணி தரப்பில் முகமது சாலா ஒரு கோல் அடித்தார்.

Leave a comment

Your email address will not be published.