ஒரு வருடத்துக்கான இயற்கை வளங்களை ஏழே மாதத்தில் தீர்த்து முடித்த மனிதஇனம்!

ஒரு வருடம் முழுவதும் தேவைப்படும் இயற்கை வளங்கள் முழுவதையும் ஏழு மாதத்துக்குள்ளாகவே அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இயற்கை வளங்கள்

பூமியின் இயற்கை வளங்கள் அழிவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மக்கள் தொகை பெருகப் பெருக வளத்துக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. தற்போது புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, மனித இனம் ஓர் ஆண்டு முழுவதும் பயன்படுத்தக்கூடிய கரிமப் பொருள்கள், உணவு, தண்ணீர், நிலம், மரங்கள் ஆகியவற்றை வெறும் 212 நாள்களில் (7 மாதங்கள்) அழித்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 1970-ம் ஆண்டு மக்கள் தொகை அதிகரிக்கும்போது எர்த் ஓவர்ஸூட் டே (Earth Overshoot Day) என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இயற்கைத் தங்களை மறு உற்பத்தி செய்துகொள்ளும் நாள் மற்றும் வளங்கள் கணக்கிடப்படும் நாளாகவும் இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இயற்கை வளங்கள் கணக்கிடும் முறைகுறித்து முழுமையாக அறிவிக்கப்படவில்லை. முதன் முதலில் ஆகஸ்டு 1-ம் தேதி Earth Overshoot Day என நிர்ணயிக்கப்பட்டது. அன்றிலிருந்து மனிதன் உபயோகம் செய்யும் வளங்களின் அளவைப் பொறுத்தே Earth Overshoot Day-வும் மாறுபட்டுவந்துள்ளது.

இந்தத் தேதி கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னர் அக்டோபர் 15-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டது. இருபது வருடங்களுக்கு முன்னர் செப்டம்பர் 30-ம் தேதியும், பத்து வருடங்களுக்கு முன்னர் ஆகஸ்டு 15-ம் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆகவே, கடந்த முப்பது வருடங்களாக எர்த் ஓவர்ஸூட் டே தள்ளிப்போய்தான் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், எப்போதும் இல்லாத அளவு இந்த வருடம் முன்னதாக ஜூலையிலேயே வருவதற்கான வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இயற்கை வளங்களை வேகமாகப் பயன்படுத்தி முடித்ததால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு Earth Overshoot Day இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே வரவிருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

குளோபல் ஃபூட் பிரின்ட் நெட்வொர்க் (Global Footprint Network) என்ற ஆராய்ச்சி அமைப்பு கூறுகையில், “தற்போது இருக்கும் மக்கள் தொகைக்கு 1.7 அளவிலான பூமியின் இயற்கை வளங்கள் தேவைப்படுகிறது. (ஒரு பூமியின் மொத்த இயற்கை வளம் மற்றும் மற்றொரு பூமியில் முக்கால்வாசி அளவு) இந்த அளவு இயற்கை வளங்கள் மற்றும் மக்கள் தொகையைப் பொறுத்து கணக்கிடப்படுகிறது. பூமியில் உள்ள அனைவரும் அமெரிக்கர்கள் வாழ்வதைப்போல் வாழ்ந்தால் இன்னும் 5 பூமி அளவு இயற்கை வளங்கள் தேவைப்படும். இந்தியர்களைப் போல் அனைவரும் வாழ்ந்தால் 0.7 பூமி மட்டுமே போதும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.