ஒரே ஆண்டில் 191 பொருட்களின் வரி குறைப்பு 28 சதவீத ஜிஎஸ்டியில் 35 பொருட்கள்

புதுடெல்லி : ஜிஎஸ்டி.யின் அதிகப்பட்ச வரியான 28 சதவீத வரி வரம்புக்குள் 35 பொருட்கள் மட்டுமே உள்ளன. ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதில், தங்கத்துக்கு மட்டும் 3 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. மற்ற பொருட்களுக்கு 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு பிரிவுகளில் வரி வசூலிக்கப்படுகிறது. மாநில நிதியமைச்சர்கள் உறுப்பினர்களாக உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் போதெல்லாம், சில பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும், சில பொருட்களுக்கு வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் விடப்பட்டன. இதை மத்திய அரசு ஏற்று அவ்வப்போது பொருட்களின் வரியை குறைத்து வருகிறது.

மத்திய நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தலைமையில் நேற்று முன்தினம் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் 88 பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டது. நாப்கினுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. 27 அங்குல டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உட்பட 15 பொருட்களின் வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதன் மூலம், அரசுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். ஆனால், வரி குறைப்பு காரணமாக இந்த பொருட்களின் விற்பனை அதிகரித்தால், அரசுக்கு வருவாய் அதிகரிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஓராண்டுக்கு முன் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது உச்சக்கட்ட வரி வரம்பான 28 சதவீதம் பிரிவில் 226 பொருட்கள் இருந்தன. தற்போது, இந்த வரி வரம்பில் சிமென்ட், வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள், டயர்கள், ஏ.சி, டிஜிட்டல் கேமிராக்கள், பாத்திரம் கழுவும் இயந்திரம், படகுகள், விமானங்கள், புகையிலை பொருட்கள் உட்பட 35 பொருட்கள் மட்டுமே உள்ளன.

கடந்த ஒரே ஆண்டில் 191 பொருட்கள் 28 சதவீத வரி வரம்பில் இருந்து படிப்படியாக நீக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி வருவாய் சீரடைந்தால், இன்னும் சில பொருட்களை 28 சதவீத வரம்பில் இருந்து அரசு நீக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டி வரி சீரடைந்த பிறகு, அனைத்து அளவிலான டி.விக்கள், பாத்திரம் கழுவும் இயந்திரம், டிஜிட்டல் கேமிராக்கள், ஏ.சி ஆகியவற்றுக்கும் 18 சதவீத வரி விதிக்கப்பட்டால் நியாயமாக இருக்கும் என வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.