ஓபிஎஸ் மற்றும் குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை நடத்தாதது ஏன்? சென்னை ஐகோர்ட் கேள்வி

சென்னை
சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக துணை முதல்- அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை பெரியகுளம் நகராட்சி தலைவராக பதவி வகித்தார். 2001-ம் ஆண்டு பெரியகுளம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு, வருவாய் துறை அமைச்சராக பதவி வகித்தார். 2001-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2002-ம் ஆண்டு மார்ச் வரை முதல்-அமைச்சராகவும் பதவி வகித்தார்.
2006-ம் ஆண்டு மீண்டும் பெரியகுளம் சட்டசபை தொகுதியில் இருந்தும், 2011, 2016-ம் ஆண்டுகளில் போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதியில் இருந்தும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2015-ம் ஆண்டு மே வரையிலும், அதன் பின்னர் 2016-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2017-ம் ஆண்டு பிப்ரவரி வரையிலும் முதல்- அமைச்சர் பதவியை வகித்தார்.
தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில், துணை முதல்-அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்ற மகன்களும், கவிதா பானு என்ற மகளும் உள்ளனர். இவர்கள் மீதும், இவரின் சகோதரர்கள் ஓ.ராஜா, ஓ.பாலமுருகன், ஓ.சண்முகசுந்தரம் மற்றும் இவரின் குடும்பத்தினர் பெயரில் ஏராளமான முதலீடுகளை ஓ.பன்னீர்செல்வம் செய்துள்ளார். தன்னுடைய தொழில் பங்குதாரர் ஆர்.சுப்புராஜ், அவரது மனைவி உமாமகேஸ்வரி ஆகியோர் பெயரிலும், பல பினாமிகளின் பெயர்களிலும் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். 2014-2015-ம் நிதியாண்டில், ஓ.பன்னீர்செல்வத்தின் வருமானம் ரூ.5 லட்சத்து 80 ஆயிரத்து 875 என்று அவர் வேட்புமனுவில் கூறியுள்ளார். அந்த நிதியாண்டில் எம்.எல்.ஏ.வுக்கான அடிப்படை மாத ஊதியம் ரூ.55 ஆயிரம் ஆகும். 12 மாதத்துக்கு அதுவே ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.
அவர் முதல்-அமைச்சர் பதவியை வகித்து இருந்ததால் இதைவிட கூடுதாக ஊதியத்தை பெற்றிருப்பார். இதுதவிர அந்த ஆண்டு ரூ.17.85 லட்சம் மதிப்புள்ள ஒரு சொகுசு காரையும் அவர் வாங்கியுள்ளார். எனவே, அவர் தவறான வருமானத்தை தாக்கல் செய்துள்ளார்.
பெரியகுளத்தில் தனக்குள்ள விவசாய நிலங்களையும், பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள வீட்டின் சொத்து மதிப்புகளையும் மறைத்துள்ளார். 2011-ம் ஆண்டு தேர்தலில் அவர் தனது மனைவிக்கு ரூ.24.20 லட்சம் மட்டுமே சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் 2016-ம் ஆண்டு தேர்தலில் விஜயலட்சுமிக்கு ரூ.78 லட்சத்துக்கு சொத்துகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வருமானமே இல்லாத குடும்ப தலைவிக்கு இவ்வளவு வருமானம் வந்தது எப்படி?.
தேனி மாவட்டத்தில் உள்ள போஜராஜன் மில்ஸ் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்ட ரூ.140 கோடி நிலத்தை ஓ.பன்னீர்செல்வம் தனது பினாமி மூலமாக சந்தை விலையைவிட குறைவாக வாங்கியுள்ளார். 150 ஏக்கர் பரப்பில் பினாமி மூலமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் செண்பகத்தோப்பு பகுதியில் மாந்தோப்பு வாங்கியுள்ளார். போடியில் நடக்கும் ஏல மார்க்கெட்டை இவர்தான் நிர்ணயம் செய்கிறார். அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் உள்ள நிறுவனங்களில் ஓ.பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.
அவரது மகன்கள் பல இந்திய நிறுவனங்களில் இயக்குனர்களாக உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தின் 2-வது மகன் ஜெயபிரதீப் 3 மிகப்பெரிய நிறுவனங்களின் இயக்குனராக பதவி ஏற்கும்போது, அவருக்கு 25 வயது கூட ஆகவில்லை. சின்ன வயதில், பல கோடி ரூபாய் முதலீடுகளை அவரால் எப்படி செய்ய முடிந்தது?
எஸ்.ஆர்.எஸ். தாது நிறுவனத்தின் உரிமையாளர் சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் 2016-ம் ஆண்டு ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை 6 மாதத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ரூ.4 கோடி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஓ.பன்னீர்செல்வம், தன் மனைவி, மகன்கள், மகள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், பினாமிகள் பெயரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை சட்டவிரோதமாக சேர்த்துள்ளார்.
இதுகுறித்து மார்ச் மாதம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வருமானத்துக்கு அதிகமாக பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ள பொது ஊழியரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீது  இன்று விசாரணை நடத்திய சென்னை ஐகோர்ட்  புகார் மீதான விசாரணையில் லஞ்ச ஒழிப்புத்துறை தாமதப்படுத்துவது ஏன்? சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றிய டைரியில் பன்னீர்செல்வத்தின் பெயர் இடம் பெற்றிருப்பதால் சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக் கூடாது என கேள்வி எழுப்பி உள்ளது.

Leave a comment

Your email address will not be published.