கடனில் மூழ்கிய தமிழ்நாடு; வருவாயைப் பெருக்க தமிழக அரசின் திட்டம் என்ன? – அன்புமணி கேள்வி

 

இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக திகழ்ந்தஇந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக திகழ்ந்த தமிழ்நாடு கடனில் மூழ்கி வருகிறது என்ற புள்ளி விவரம் கவலை அளிக்கிறது என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் பொருளாதாரம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் என்றாலும், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக திகழ்ந்த தமிழ்நாடு கடனில் மூழ்கி வருகிறது என்ற புள்ளி விவரம் கவலை அளிக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி சில நாட்களுக்கு முன் வெளியிட்ட 2017-18 ஆம் ஆண்டிற்கான கையேட்டில் மாநிலங்களின் நிதிப்பற்றாக்குறை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. மிக அதிக நிதிப் பற்றாக்குறை உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. 2017-18 ஆம் ஆண்டில் தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.40,530 கோடி ஆகும்.

உத்தரப்பிரதேசம் ரூ.49,960 கோடி நிதிப்பற்றாக்குறையுடன் முதலிடத்திலும், ரூ.43,150 கோடி நிதிப் பற்றாக்குறையுடன் ராஜஸ்தான் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்தப்பட்டியலில் மஹராஷ்டிரா நான்காவது இடத்திலும், கர்நாடகம் ஐந்தாவது இடத்திலும் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு அல்லது மாநில அரசின் ஒட்டுமொத்த வருவாய்க்கும், மூலதனச் செலவுகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த செலவுகளுக்கும் இடையிலான வித்தியாசம் தான் நிதிப்பற்றாக்குறை ஆகும். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே வருவாயின் அளவு அதிகரிக்காத நிலையில் செலவு மட்டும் கணிசமாக அதிகரித்து வருவது தான் அனைத்து சிக்கலுக்கும் காரணம் ஆகும்.

மற்ற மாநிலங்களின் வருவாய் ஆண்டுக்கு சராசரியாக 15% என்ற அளவில் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் வருமானம் ஆண்டுக்கு 10 முதல் 12% என்ற அளவில் தான் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், தமிழக அரசின் செலவுகள் தான் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமின்றி தமிழக அரசின் செலவுகள் முதலீடுகளாகவோ, பயனளிக்கும் செலவுகளாகவோ அமைவதில்லை என்பதும் கவலையளிக்கிறது.

2018-19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளின்படி தமிழகத்தின் மொத்த வருவாய் செலவுகளில் 40.02%, அதாவது ரூ.77,533 அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடப்படுகிறது. இது தவிர்க்க முடியாதது என்பதால் மற்ற செலவினங்களை சீரமைக்க வேண்டும். அதை தமிழக அரசு செய்வதில்லை. உதாரணமாக மானியங்கள் மற்றும் இலவசங்களுக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.75,723 செலவிடப்படுகிறது.

இது அரசின் வருவாய் செலவினங்களில் 39% ஆகும். இவை தவிர கடனுக்கான வட்டியாக மட்டும் ரூ. 29,624 கோடி அதாவது 15.29% செலுத்தப்படுகிறது. இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் இவ்வளவு அதிக தொகை வட்டியாக செலுத்தப் படுவதில்லை. இவை போதாதென பராமரிப்புச் செலவுகள் என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ.10,838 கோடியை அரசு செலவு செய்கிறது. இது மாநிலத்தின் வருவாய் செலவுகளில் 6% ஆகும். தமிழகத்தின் வருவாய் முழுவதும் இவ்வாறு தான் செலவிடப்படுகிறது. தமிழக ஆட்சியாளர்களுக்கும் நிதி மேலாண்மைக்கும் சிறிதும் சம்பந்தமே இல்லை என்பதைத் தான் மேற்கண்ட புள்ளி விவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

இந்தியாவில் ஒட்டுமொத்த உற்பத்தி விகிதத்திலும், நிதிநிலை அறிக்கை மதிப்பிலும் முதலிடத்தில் இருப்பது மஹராஷ்டிரா மாநிலம் தான். ஆனால், அந்த மாநிலத்தின் நிதிப்பற்றாக்குறை ரூ.35,030 கோடி மட்டுமே. அதன் நிதிப்பற்றாக்குறை அதன் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 1.49% மட்டும் தான்.

ஆனால், தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை அளவு தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 2.79 விழுக்காட்டுக்கும் கூடுதலாகும். தமிழகத்தின் பொருளாதாரம் மிகவும் ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருப்பது குறித்து பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அதை சரி செய்ய தமிழக ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் மிகவும் வேதனை அளிக்கும் செய்தி ஆகும்.

தமிழக அரசின் வரி வருமானத்தை எளிதாக அதிகரித்திருக்க முடியும். ஆனால், அதிமுக மற்றும் திமுக ஆட்சிகளில் ஊழல் மற்றும் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மிகப்பெரிய அளவில் நடந்த வரி ஏய்ப்பு காரணமாக ஒட்டுமொத்த வரி வருவாய் 20% வரை குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பொருளாதாரம் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில் இதை எவ்வாறு சமாளித்து, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லப் போகிறது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.

இந்தியாவில் தற்போது பொருட்கள் மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் வரி வருவாயை அதிகரிப்பதில் மாநில அரசுக்கு பெரிய அளவில் பங்கு இல்லை. மாறாக, ஆற்று மணல், தாது மணல், கிரானைட் போன்ற இயற்கை வளங்கள் விற்பனையை அரசே ஏற்று முறைப்படுத்துவதன் அரசின் வருவாயை பெருக்கவும், பயனில்லாத செலவுகள் மற்றும் கடனுக்கான வட்டியை குறைப்பதன் மூலம் அரசின் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published.