கமல் மீது வழக்குப்பதிவு செய்துள்ள விவகாரம் குறித்து, ‘கடவுளே… எங்களைக் காப்பாற்று’ எனத் தெரிவித்துள்ளார் விஷால்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, அங்குள்ள மக்கள் பல நாட்களாகப் போராடி வருகின்றனர். நேற்று நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். தூத்துக்குடியில் 5 அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கமல்ஹாசன் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தது சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறி அவர்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விஷால், “வினோதமான விஷயம் ஒன்றைக் கேள்விப்பட்டேன். தூத்துக்குடியில் தாக்குதலுக்கு ஆளான அப்பாவிப் பொதுமக்களைச் சந்தித்ததற்காக கமல்ஹாசன் சார் மீது வழக்குப்பதிவா? என்ன கொடுமை. இது உண்மை என்றால், வெளிப்படையான அட்டூழியம். நடிகர்/அரசியல்வாதி/சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர் அங்கு சென்று ஆறுதல் கூறாமல் வேறு யார் செல்வது? கடவுளே… எங்களைக் காப்பாற்று” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.