கர்நாடகா: ஜெயநகர் தொகுதி சட்டப்பேரவை தொகுதியில் வாக்குப்பதிவு துவங்கியது

கர்நாடகாவில் உள்ள ஜெயநகர் தொகுதி சட்டப்பேரவை தொகுதியில் வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. #Karnataka #Jayanagar
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு கடந்த மாதம் 12–ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்த விஜயகுமார் எம்.எல்.ஏ, கடந்த மாதம் 4–ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து, ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் மாதம் 11ம்  தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகளான சவுமியா ரெட்டியும், பா.ஜனதா சார்பில் மறைந்த விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர் பிரகலாத் பாபுவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இங்கு காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் தேவே கவுடா அறிவித்துள்ளார். இதனால் அந்த தொகுதியில் காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஜெயநகர் தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இந்த தொகுதியில் ஒரு லட்சத்து, 2 ஆயிரத்து 668 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 500 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 16 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். தேர்தலுக்காக 216 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜெயநகர் தொகுதியில் ஓட்டுப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கு தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மேலும் ஓட்டுப்பதிவு அமைதியான முறையில் நடைபெற ஜெயநகர் தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஜெயநகர் தொகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இன்று நடைபெற்று வரும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13–ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் வெளியாகலாம் என தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published.