தமிழகத்தில் காற்று மாசுபாடுள்ள நகரமாகத் தூத்துக்குடி மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற மாநிலங்களவையில் கனிமொழி கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்திருக்கிறார் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் மகேஷ் ஷர்மா.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி, “நாடு முழுவதும் காற்று மாசுபட்ட நகரங்களை ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டு இருக்கும் நிலையில் அந்தப் பட்டியலில் உள்ள நகரங்களின் பெயரை அரசு அறிவிக்குமா, காற்று மாசு குறித்து அறிய கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்படுமா’ என எழுத்துபூர்வமாகக் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் இணை அமைச்சரான மகேஷ் ஷர்மா பதில் அளித்தார்.
அவர் அளித்துள்ள பதிலில், “தேசிய காற்று தர கண்காணிப்பு இயக்ககத்தின் சார்பாகக் கடந்த 2011 முதல் 2015 வரை நடத்தப்பட்ட ஆய்வில் காற்று மாசு அடைவதைக் கட்டுப்படுத்த முடியாத நகரங்கள் கண்டறியப்பட்டன. உலக சுகாதார ஆய்வு நிறுவன அறிக்கையின்படி இந்தியாவில் காற்று மாசுபட்ட நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 102 இந்திய நகரங்கள் காற்று மாசுபட்ட நகரங்களாக கண்டறியப்பட்டு இருக்கின்றன. அதில் தமிழகத்திலிருந்து தூத்துக்குடி நகரம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நாடு முழுவதும் தூய காற்றுக்கான தர கண்காணிப்பு இயக்கத்தை நடத்தி வருகிறோம். அதன்படி, நாட்டில் உள்ள 29 மாநிலங்கள் 6 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 307 நகரங்களில் 703 காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை தூத்துக்குடி, சென்னை, மதுரை, சேலம், மேட்டூர், கோவை, கடலூர், திருச்சி ஆகிய 8 நகரங்களில் 31 காற்று தர கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தவிர, 17 மாநிலங்களில் 68 நகரங்களில் தொடர் காற்று தர கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை, ஆலந்தூர், மணலி, வேளச்சேரி ஆகிய நகரங்களில் செயல்படுகின்றன. இதேபோல, இன்னும் 108 தொடர் காற்று தர கண்காணிப்பு மையங்களை மாநில அரசின் பங்களிப்புடன் அமைக்க இருக்கிறோம்’’ எனத் தெரிவித்தார். நாடாளுமன்ற அவையில் மத்திய அமைச்சர் அளித்த பதிலில் தூத்துக்குடி காற்று மாசு கொண்ட நகரம் என ஒப்புக்கொண்டிருப்பது அங்கு வசிக்கும் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.