காவிரி மேலாண்மை வாரியத்துக்கு உறுப்பினர் நியமனம்: கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியத்துக்கான உறுப்பினரை கர்நாடக அரசு நேற்று அறிவித்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு கடந்த 1-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைப்பதை அரசிதழில் வெளியிட்ட‌து. அதன்பின் 2 அமைப்புகளுக்கும் உறுப்பினர்களை நியமிக்க பிரதிநிதிகளின் பெயர்களை அனுப்புமாறு கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

கர்நாடகாவை தவிர மற்ற 3 மாநிலங்களும் உறுப்பினரின் பெயரை அறிவித்தன.

இதையடுத்து கடந்த 22-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றுக்கு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்தது.

இதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.இந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று பெங்களூருவில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு பிறகு துணை முதல்வர் பரமேஷ்வர் கூறும்போது, ‘‘காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக பிரதிநிதியாக நீர்வளத் துறை செயலர் ராகேஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். காவிரி நீர் ஒழுங்காற்று குழுவுக்கு கர்நாடக பிரதிநிதியாக தலைமை பொறியாளர் பிரசன்னா செயல்படுவார்’’ என்றார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 கடிதங்களை கர்நாடக முதல்வர் குமாரசாமி எழுதியுள்ளார்.

முதல் கூட்டம்

இதனிடையே ஜூலை முதல் வாரத்தில் ஆணையத்தின் முதல் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படு கிறது.

Leave a comment

Your email address will not be published.