குடலிறக்கம் யோகாசனத்திலும் உண்டு தீர்வு

அம்பிலிக்கல் ஹெர்னியா’ எனப்படும் குடலிறக்கப் பிரச்னைக்கான காரணங்கள் மற்றும் சிகிச்சைகள் பற்றிக் கடந்த இதழில் பார்த்தோம். இந்தப் பிரச்னைக்கு யோகாசனங்களும் உதவும் என்கிறார் பிரபல யோகா நிபுணர் ஸ்ரீதரன்.

“ `அம்பிலிக்கல் ஹெர்னியா’ பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்கக் குறிப்பிட்ட சில யோகாசனப் பயிற்சிகளும், பிராணயாமப் பயிற்சிகளும் உதவும். ஆனாலும் ஓர் எச்சரிக்கை. யோகப்பயிற்சிகளைத் தேர்ந்த யோகா ஆசிரியரிடம் நேரடியாகக் கற்றுச் செய்து வருவது அவசியம். ஏனென்றால் தேர்ந்த யோகா நிபுணரால் மட்டுமே அவரவர் உடல்நிலையின் தன்மைக்கு ஏற்ப யோகப்பயிற்சிகளை சொல்லித்தர முடியும்.  `அம்பிலிக்கல் ஹெர்னியா’ பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்க இங்கே சொல்லப்பட்டுள்ள பயிற்சிகளைப் பார்த்து நீங்களாகவே முயற்சி செய்யக் கூடாது. உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசித்து யோகா நிபுணரிடம் நேரடியாகப் பயிற்சியைக் கற்றுக்கொண்டபிறகே செய்ய வேண்டும்’’ என்கிற அறிவுரையுடன் சில யோகாசனங்களைப் பற்றி விளக்குகிறார்.

ஏக பாத  அபானாசனம்

1. இடது கால் முட்டியை இடது உள்ளங்கையால் பிடித்துக்கொள்ளவும்.

2. மூச்சை வெளிவிட்டுக்கொண்டே முட்டியை உடலுக்கு அருகில் கொண்டுவரவும். மறுபடியும் மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே முட்டியை, படம் 1-ல் இருப்பது போலப் பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

இதுபோன்று ஆறுமுறை செய்துவிட்டு, வலது முட்டியை வலதுகையால் பிடித்துக்கொண்டு இடதுமுட்டியில் செய்ததுபோலவே ஆறுமுறை செய்யவும்.

ஏகபாத ஊர்த்வ ப்ரஸ்ரித பாதாசனம்

1.இடது கால் முட்டியை இடது உள்ளங்கையால் பிடித்துக்கொள்ள வேண்டும். முட்டியை உடலுக்கு அருகில் கொண்டுவர வேண்டும்.

2. மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே முட்டியை வெளியே தள்ளி இடதுகாலை செங்குத்தான நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். பிறகு மூச்சை வெளிவிட்டபடியே இடது முட்டியை மடக்கி படம் 1-ல் உள்ளதுபோல உடலுக்கு அருகில் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். இதுபோல ஆறுமுறை செய்ய வேண்டும்.

இடதுபக்கம் முடிந்தவுடன், வலதுகாலிலும் இதுபோல ஆறுமுறை செய்ய வேண்டும்.

பிராணயாமம்

1. தொப்புள்மீது ஓர் உள்ளங்கையை வைக்கவும். (அழுத்த வேண்டாம்). மூச்சு வெளிவிடும்போது மெதுவாக வயிற்றை உள்ளிழுக்கவும். இதனால்,தொப்புள் முதுகுத்தண்டு வடத்தை நோக்கிச் செல்லும். வயிறு குறுகும். மூச்சை உள்ளிழுக்கும்போது மார்பு விரிந்து மேல்வயிறு சற்று விரியும். இந்தப் பயிற்சியை பத்து தடவை செய்யவேண்டும்.

அடுத்து மேலே சொன்னதுபோல பயிற்சி செய்து, மூச்சை வெளிவிட்டு நான்கு நொடிகள் பிடிக்கவும்.

2. படம் ஒன்றில் காணப்படும் பயிற்சியை பத்து தடவை உட்கார்ந்தும் செய்யலாம்.

எச்சரிக்கை (குறிப்பாக அறுவை சிகிச்சை ஆனவர்களுக்கு!)

வயிற்றில் அழுத்தம் கொடுக்கும் பயிற்சிகளைத் தவிர்க்கவும்.

Leave a comment

Your email address will not be published.