குடும்பக் கட்டுப்பாட்டுக்குக் கருத்தடை ஊசி அவசியமா?

உலகில் முதன்முதலாக 1952-ல் தேசிய அளவில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை இந்தியாதான் கொண்டுவந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டத்தின் பலனாக, இந்தியாவின் மக்கள்தொகை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது உண்மைதான். ஆனால், 2017-ல் எடுத்த கணக்கெடுப்பின்படி உலக மக்கள்தொகை 760 கோடி என்றால், அதில் இந்தியாவின் பங்கு 130 கோடி என்று தெரியவந்திருக்கிறது. இதுவே 2025-ல் 140 கோடியாக வளர்ச்சி பெறும் என்று ஓர் எதிர்பார்ப்பும் இருக்கிறது.

‘இந்த நிலைமை உறுதியானால், அது நாட்டின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சியையும் சமூக மேம்பாட்டையும் பெருமளவில் பாதிக்கும்’ என்று எச்சரிக்கிறது 2017-ல் வெளியான தேசிய சுகாதார அறிக்கை. தேசியக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கம், மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டில் பிரசவத்தின்போது ஏற்படுகிற தாய்-சேய் மரணங்களைக் கட்டுப்படுத்துவது. பிரவத்தின்போது தாய்மார்களில் ஏற்படும் உயிரிழப்பு ஒரு லட்சத்துக்கு 130 என்ற அளவில் இருக்கிறது. இதுபோல, சிசுக்களின் இறப்புவிகிதமும் ஆயிரம் குழந்தைகளுக்கு 40 ஆக இருக்கிறது. இந்த இரண்டையும் முறையே 100, 30 என்ற அளவுக்குக் குறைக்க வேண்டும் என்பது மத்திய சுகாதார அமைச்சகம் சென்ற ஆண்டில் எடுத்துக்கொண்ட ஒரு முக்கியமான தேசியத் திட்டம்.

இதைச் செயல்படுத்துவதற்கு முன்பு, தற்போது மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு அடிப்படைக் காரணங்களாக விளங்கும் மூன்று விஷயங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. 1) இந்தியாவில் 42 கோடிக்கும் அதிகமான பெண்கள் முறையான குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்படாமல் இருக்கின்றனர். 2) பதினெட்டு வயது முடிவதற்கு முன்பே 22% பெண்களுக்குத் திருமணம் ஆகிவிடுகிறது. 3) இரு குழந்தைகளின் பிறப்புக்கு நடுவில் மூன்று ஆண்டுகள் இடைவெளி விட வேண்டும் என்ற தற்காலிகக் கருத்தடை விதியைச் சுமார் 60% பெண்கள் பின்பற்றுவதில்லை. இந்த மூன்றையும் சரிப்படுத்தினால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 35 ஆயிரம் தாய்மார்களின் இறப்பைத் தடுத்துவிடலாம்; 12 லட்சம் சிசுக்களின் மரணத்தையும் தடுத்துவிட முடியும்; இவற்றின் மூலம் சுமார் 4,500 கோடிப் பணத்தை இந்திய கஜானாவில் மிச்சப்படுத்தலாம் என்றும் கணக்கிடப்பட்டது.

கருத்தடை ஊசி!

இதற்கான முக்கிய நடவடிக்கையாக, 2017 ஜூலையில், தேசியக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில், ‘டிஎம்பிஏ’ எனும் புரோஜெஸ்டிரோன் கருத்தடை ஊசியைச் சேர்த்துக்கொண்டனர். இதன் வழியாக சுமார் 12% பெண்களுக்கு முதல் குழந்தை பெறுவதையும், இரண்டாம் குழந்தைக்கான கருத்தரிக்கும் வாய்ப்பையும் தள்ளிப்போடலாம் என்பது ஒரு கணிப்பு. மேலும், கருத்தடை விஷயத்தில் மருத்துவத் துறையில் புகுந்துள்ள நவீன முறைகளையும் மக்களுக்கு எட்டும்படிச் செய்துவிட முடியும்.

‘டிஎம்பிஏ’ என்பது பெண்கள் கருத்தரிப்பதைத் தற்காலிகமாகத் தடுக்கும் ஹார்மோன் ஊசி. இதைத் திருமணமான பெண்களுக்கு இலவசமாகப் போடுகின்றனர். முதலில், தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் கருவுறும் விகிதம் அதிகமுள்ள 146 மாவட்டங்களில் மட்டும் மாவட்ட மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்த மருந்து கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஊசியை 18-லிருந்து 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை போட்டுக்கொள்ள வேண்டும். இது அவர்களின் சூலகத்திலிருந்து (ஓவரி) முட்டை வெளியாவதைத் தடுப்பதோடு, மாதவிலக்கு ஏற்படுவதையும் நிறுத்திவிடுகிறது. மேலும், ஆணின் விந்தணுக்கள் கருப்பையில் நகர முடியாதச் சூழலையும் ஏற்படுத்திவிடுகிறது. இவற்றின் விளைவாக, அந்தப் பெண்கள் கர்ப்பம் அடைவதில்லை. அதேநேரம், இந்த ஊசி போட்டுக்கொள்வதை நிறுத்திக்கொண்டால், 6 – 10 மாதங்களுக்குப் பிறகு, மறுபடியும் இவர்கள் கருத்தரிக்க முடியும். இவ்வாறாக, பெண்கள் கருத்தரிப்பதைச் சில ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட உதவுகிற தற்காலிகக் கருத்தடை முறையாக இது செயல்படுகிறது.

என்ன பிரச்சினை?

இந்த ஊசியால் ஆரம்பத்தில் மாதவிலக்கு முறை தவறிப்போகும் அல்லது உதிரப்போக்கு அதிகமாக இருக்கும்; பிறகு முழுவதுமாக நின்றுவிடும்; உடற்பருமன் ஏற்படும்; பாலுறவில் நாட்டமும் ஈடுபடுதலும் குறையும். அடிக்கடி தலைவலி வந்து தொல்லை கொடுக்கும். முக்கியமாக, எலும்பின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ (ஆஸ்டியோபோரோஸிஸ்) ஏற்படும். மார்பகப் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புண்டு. இவை எல்லாமே மேல்நாடுகளில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளன. வளர்ந்த நாடுகளில் இதன் பயன்பாடு குறைந்துவருவதிலிருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம். இந்தியாவில் இம்மாதிரியான ஆராய்ச்சிகள் குறைவு என்பதால் இந்தப் பக்கவிளைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ‘எளிய கருத்தடை முறை’ என்பதை மட்டும் முன்னிலைப்படுத்தி இந்த ஊசியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளனர்.

உலக சுகாதார நிறுவனம் இந்த ஊசியைப் பரிந்துரைக்கும்போது இதன் பக்கவிளைவுகளைப் பயனாளிகளுக்குப் புரியும்படி எடுத்துச்சொல்லி சம்மதம் பெற்ற பிறகுதான் இதைப் பயன்படுத்த வேண்டும் என்றும், யாரையும் வற்புறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இந்தியாவில் இதைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொருமுறையும் ரூ.100 சன்மானம் கொடுத்து ஊக்கப்படுத்துகின்றனர். பொருளாதாரத்தில் விளிம்புநிலையில் உள்ளவர்களிடமும் அதிகம் கல்வியறிவு இல்லாதவர்களிடமும் பணத்தை முன்னிலைப்படுத்தும்போது இந்த ஊசியின் பக்கவிளைவுகளைப் புறந்தள்ளும் போக்குதான் வழக்கமாக நிகழும். இதனால், பெண்களின் ஆரோக்கியம் கெடும்.

மேலும், இந்த ஊசியைப் போட்டுக்கொள்வது எளிது என்பதால் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் தற்காலிகக் கருத்தடை முறைகளான ஆணுறைப் பயன்பாடு, கருத்தடை மாத்திரைகள், லூப், காப்பர்-டி பொருத்துதல் ஆகிய பாதுகாப்பான கருத்தடை முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைந்துவிடுகிறது. இவற்றில் ஆணுறைப் பயன்பாடு கருத்தடைக்கு மட்டுமல்லாமல் எய்ட்ஸ் உள்ளிட்டப் பால்வினை நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. எனவே, இந்த ஊசி மருந்தை அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தால் மறுபடியும் நம் நாட்டில் இந்த நோய்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த ஊசியை அதிகமாகப் பயன்படுத்தும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதை வரலாறு நிரூபிக்கிறது.

தற்காலிகக் கருத்தடைக்கு ஆணுறை, பெண்ணுறை, லூப், காப்பர்-டி போன்றவற்றைப் பயன்படுத்துவதுதான் பக்கவிளைவுகள் இல்லாத சிறந்த கருத்தடை முறைகள் என்பதைச் சரியான ‘மருத்துவச் சங்கிலி’ நடவடிக்கைகள் மூலம் மக்களுக்குப் புரியவைத்து, கருத்தடை விழிப்புணர்வை மேம்படுத்தி, மக்கள்தொகைப் பெருக்கத்தைத் தடுக்க முனைப்பு காட்ட வேண்டும். மாறாக, பெண்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிட்டு, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திவிட்டோம் என்று மார்தட்டிக்கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது?

1 comment

Leave a comment

Your email address will not be published.