குணப்படுத்த முடியாத நோய்களுக்குத் தீர்வாகுமா ஜீன் எடிட்டிங்? #GeneEditing

தீர்க்க முடியாத நோய்களுக்குத் தீர்வாகும் ஜீன் எடிட்டிங்… ஏன், எதற்கு, எப்படி? #GeneEditing

குணப்படுத்த முடியாத நோய்களுக்குத் தீர்வாகுமா ஜீன் எடிட்டிங்? #GeneEditing

றுப்பு மாற்று அறுவைசிகிச்சை, ஸ்டெம் செல் சிகிச்சை, குளோனிங் போன்ற மருத்துவத் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது `ஜீன் எடிட்டிங் (Gene Editing).’ பெற்றோரின் உருவத் தோற்றம் முதல் குணநலன்கள்வரை குழந்தைகளுக்கு எடுத்துச்செல்வது மரப்பணுக்கள்தான். ஒருவர் நோய்வாய்ப்படுவதற்கும் அல்லது ஆரோக்கியமாக இருப்பதற்கும் இந்த மரபணுக்களே பிரதான காரணிகளாக இருக்கின்றன.

மரபணு

ஆண்டொன்றுக்கு விளைச்சல் தரும் நெற்பயிரை ஆறுமாதங்களில் விளைவிப்பது… ஒரு ஏக்கரில் விளையும் பயிரை அரை ஏக்கர் நிலத்திலேயே விளைவிப்பதெல்லாம் மரபணு மாற்றத்தால் சாத்தியமாகியிருக்கிறது. இதனால் மக்கள்தொகைப் பெருக்கத்தால் நேரும்  உணவுத்தட்டுப்பாட்டை பெருமளவுக்குக் குறைத்திருக்கிறோம். விலங்குகளிலும் மரபணு மாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக, மனிதர்களுக்கும் மரபணுக்களை மாற்றலாம் என்பது தொடர்பான சோதனை முயற்சிகளை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். மரபணு மாற்றப்பட்ட விதை, பயிர், காய், கனிகளுக்கு எதிரான குரல்கள் வலுவாக எழுந்துகொண்டிருந்தாலும், அறிவியல் துறையில் இது தொடர்பான ஆராய்ச்சிகள் நின்றபாடாக இல்லை. அந்தப் பரிசோதனைகளில் சில நன்மைகளும் நமக்குக் கிடைக்கத்தான் செய்கின்றன.

இந்தநிலையில், `குணப்படுத்த முடியாத நோய் பாதிப்புகளுக்கும், பரம்பரையாகத் தொடரும் நோய்களுக்கும் மட்டுமாவது ஜீன் எடிட்டிங் முறையைப் பயன்படுத்தலாம்’ என்று இங்கிலாந்தில் உள்ள நஃபீல்டு கவுன்சில் ஆன் பயோஎத்திக்ஸ் (Nuffield Council on Bioethics) கமிட்டி, அந்த நாட்டு அரசுக்கு, கடந்த வாரம் பரிந்துரை செய்திருக்கிறது. அதற்காக மேற்கொண்ட ஆய்வு முடிவுகளையும் சமர்ப்பித்திருக்கிறது. இந்தப் பரிந்துரையை ஏற்று, பரிசீலினை செய்யவிருக்கிறது இங்கிலாந்து நாட்டின் நெறிமுறைக் குழு (British Ethics Panel).

`அதென்ன ஜீன் எடிட்டிங்… அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?’’ சென்னையில் செயல்பட்டுவரும் சென்டர் ஃபார் மெடிக்கல் ஜெனட்டிக்ஸ் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் உத்ரா சடகோபனிடம் கேட்டோம்…

“மனித உடலில் எண்ணற்ற செல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒவ்வொரு செல்லின் உட்கருவுக்குள்ளும் 23 ஜோடிகளாக 46 குரோமோசோம்கள் இருக்கின்றன. இந்தக் குரோமோசோம்களுக்குள் ஆயிரக்கணக்கான மரபணுக்கள் (Genes) இருக்கின்றன. மரபணுக்களில் ஏற்படும் மாற்றம், நமது உடல் அமைப்பு மற்றும் பண்புகள் சார்ந்த மாற்றங்களுக்கும் காரணமாக இருக்கிறது.

மரபணுவின் ஒரு பகுதியை நீக்குவது அல்லது மற்றொரு மரபணுவோடு சேர்ப்பது போன்ற பகுப்பாய்வுகளை உள்ளடக்கிய தொழில்நுட்ப முறையை `ஜீன் எடிட்டிங் (Gene Editing) அல்லது `ஜெனட்டிக் இன்ஜினீயரிங்’ (Genetic Engineering) என்கிறோம்.

டி.என்.ஏ.

அதாவது, நல்ல பண்புகளுக்குக் காரணமாக இருக்கும் மரபணுக்களை ஒன்றிணைத்து ஒரு புதிய கருவை உருவாக்கவும், அந்தக் கருவிலிருந்து நாம் விரும்பும் பண்புகளை உடைய ஒரு புதிய உயிரியை உருவாக்கவும் இந்த நவீனத் தொழில்நுட்பம் உதவும். அதோடு, நோய் உருவாக்கத்துக்குக் காரணமாக இருக்கும் மரபணுவை அடையாளம் கண்டு, அதை மாற்றியமைக்க, நீக்க ஜீன் எடிட்டிங் உதவுகிறது. இதன் மூலம் அந்த உயிரிக்கு மரபணு அடிப்படையிலான மருத்துவச் சிகிச்சையை மேற்கொள்ள முடியும் என்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.

இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் நோயைக் குணப்படுத்தலாம்; நாம் விரும்பும் பண்புகளை உடைய மரபணுவை உருவாக்கலாம்; நம் விருப்பத்துக்கேற்ப மரபணுவை மாற்றம் செய்லாம்; ஒரு புதிய தாவரம் அல்லது விலங்கை உருவாக்கலாம். முக்கியமாக, இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் பரம்பரை நோய்கள், புற்றுநோய்கள், டவுண் சிண்ட்ரோம், குழந்தையின்மை போன்ற பல பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியுமா என்பது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அப்படிப்பட்ட சில ஆய்வுகளில் வெற்றியும் கிடைத்திருக்கிறது.

ஜீன் எடிட்டிங்

உதாரணமாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் 11 வயது குழந்தை ஒன்றுக்கு லூக்கிமியா (Leukemia) என்ற ரத்தப்புற்றுநோய் இருந்தது. அதைக் குணப்படுத்த ஜீன் எடிட்டிங்கைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்தக் குழந்தையின் உடல்நிலையில் இப்போது நல்ல முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்த அறிக்கையைக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் ஹேமட்டாலஜியின் (American Society of Hematology) கருத்தரங்கில் சமர்ப்பித்திருக்கிறார்கள்.

அதேபோலத்தான், இங்கிலாந்திலிருக்கும் நஃபீல்டு கவுன்சில் ஆன் பயோஎத்திக்ஸ், `குணப்படுத்த முடியாத நோய்களுக்காவது முதற்கட்டமாக இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்’ என்று பரிந்துரை செய்திருக்கிறது. இதே கருத்தை, அமெரிக்கா ஜர்னல் ஆஃப் தி மெடிக்கல் சயின்ஸ் (The American Journal of the Medical Sciences), அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் (American Medical Association) ஆகியவையும் பரிந்துரைத்திருக்கின்றன. பல நாடுகள் ஜீன் எடிட்டிங்கை நடைமுறைக்குக் கொண்டுவரத் தயங்குவதற்குக் காரணமும் இருக்கிறது. சிலர் ஜீன் எடிட்டிங்கைத் தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், மருத்துவத்துக்கு உதவும் என்கிற வகையில் இது போன்ற தொழில்நுட்ப முயற்சிகள் வரவேற்கப்படத்தான் வேண்டும். ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்’’ என்கிறார் உத்ரா

Leave a comment

Your email address will not be published.