குறைந்த விலையில் செல்போன் தருவதாக விளம்பரம் செய்த ரிங்கிங்பெல்ஸ் நிறுவன தலைவர் கைது

குறைந்த விலையில் செல்போன் தருவதாக விளம்பரம் செய்த ரிங்கிங்பெல்ஸ் நிறுவன தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
ரிங்கிங் பெல்ஸ்’ என்ற நிறுவனம் ‘பிரீடம் 251’ என்ற பெயரில் ரூ.251–க்கு செல்போன் வழங்குவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு பல முன்னணி செல்போன் நிறுவனங்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதில் சதி இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். ஆனால், இந்த நிறுவனம், அறிவித்தபடி குறைந்த விலையில், செல்போன்களை வழங்கவில்லை என புகார் எழுந்தது. மேலும், மோசடி புகாரிலும் இந்த நிறுவனம் சிக்கியது. இதையடுத்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், ஐந்து தொழில் அதிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக ரிங்கிங்பெல்ஸ் நிறுவனர் மொகித் கோயல் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய தொழில் அதிபர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக மொகித் கோயல் மற்றும் அவரது உதவியாளர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 16 லட்சம் அளவுக்கு பண மோசடி செய்துவிட்டதாக அயம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் அளித்த புகாரில் மொகித் கோயல் கைது செய்யப்பட்டு இருந்தார். இதையடுத்து, மே 31 ஆம் தேதி அலகாபாத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. இந்த நிலையில், மீண்டும் மொகித்கோயல் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published.