குழாய் மூலம் வீடுகளுக்கு காஸ் விநியோகிக்கும் திட்டம்: முதற்கட்டமாக சென்னையில் அறிமுகப்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு

குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் காஸ் விநியோகிக்கும் திட்டத்தை முதற்கட்டமாக சென்னையில் அறிமுகப்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன்மூலம் நுகர்வோர்களுக்கு குறைந்த விலையிலும், தட்டுப்பாடின்றியும் சமை யல் காஸ் கிடைக்கும் என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அரசாங்க நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை, சமையல் எரிவாயுவை (காஸ்) வீட்டு உபயோகம், வணிக பயன்பாடு என தனித்தனியாக வெவ்வேறு அளவில் உள்ள சிலிண்டர்களில் அடைத்து விற்பனை செய்கின்றன. இந்த சிலிண்டர்கள் நுகர்வோர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் காஸ் விநியோகம் செய்ய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

தற்போது வீடுகள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட வர்த் தக நிறுவனங்களுக்கு சிலிண்டர்கள் மூலம் சமையல் காஸ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சமையல் காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 22.5 கோடி பேர் உள்ளனர். தமிழகத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த சிலிண்டர்களை விநியோகம் செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. அத்துடன் நுகர்வோர்களிடம், சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வரு கின்றன.

இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விதமாக பூமிக்கடியில் குழாய் பதித்து வீடுகளுக்கு சமையல் காஸ் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, மும்பை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் காஸ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் முதற்கட்டமாக சென்னையில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் காஸ் விநியோகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக, விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது.

எண்ணூரில் இயற்கை எரிவாயு முனையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும் இதற்கான பணிகள் தொடங்கப்படும். பூமிக்கடியில் மின்சார கேபிள்கள், குடிநீர் குழாய்களை பதிப்பதைப் போன்று சமையல் காஸை கொண்டு செல்வதற்கு குழாய் கள் அமைக்கப்படும். இந்தக் குழாய்களில் குறைந்த அழுத்தத்தில் காஸ் செலுத்தப்படும். இதனால், சிலிண்டரில் சமையல் காஸ் கொண்டு செல்வதை விட அதிக பாதுகாப்பாக இருக்கும். அத்துடன், நுகர்வோர்கள் எவ்வளவு காஸை பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்து கொள்ள வசதியாக மீட்டர் பொருத்தப்படும். வழக்கமாக சிலிண்டர்களுக்கு செலவிடப்படும் தொகையை விட இதற்கு செலவு குறைவாக இருக்கும். குறிப்பாக, சிலிண்டர்களை விநியோகம் செய்ய ஊழியர்களுக்கு கூடுதல் தொகை கொடுப்பது மிச்சமாகும். அத்துடன், சிலிண்டரை வாங்க புக்கிங் செய்துவிட்டு நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Leave a comment

Your email address will not be published.