கொடுத்த வாக்குறுதியை மறுபடியும் மீறிய விஜய்

‘இனிமேல் புகை பிடிக்க மாட்டேன்’ என்ற வாக்குறுதியை மறுபடியும் மீறியிருக்கிறார் விஜய்.

விஜய்யின் 62-வது படத் தலைப்பு ‘சர்கார்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்க்கு நாளை (ஜூன் 22) பிறந்த நாள். அதை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு சன் தொலைக்காட்சியில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், தீபாவளிக்கு ரிலீஸாகும் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், விஜய் சிகரெட் பிடிக்கும் படம் உள்ளது. ஆனால், இனிமேல் புகை பிடிப்பது போன்ற காட்சியில் நடிக்க மாட்டேன் என தான் கொடுத்த வாக்குறுதியை விஜய் மீறியுள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான கூட்டமைப்பும், பசுமைத் தாயகம் அமைப்பும் இணைந்து ‘தமிழ்நாட்டில் புகையிலை கட்டுப்பாடு’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தின. இந்த நிகழ்ச்சியில், அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.

“சினிமாவில் குடிப்பதற்கும், புகை பிடிப்பதற்கும் எதிராக நாங்கள் போராடி வருகிறோம். எங்கள் போராட்டத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அதேபோல் விஜய்யும் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார் அன்புமணி ராமதாஸ்.

அவருடைய வேண்டுகோளை, விஜய்யும் ஏற்றுக் கொண்டார். அப்போது ஸ்ரீபெரும்புதூர் அருகே ‘குருவி’ படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜய்யிடம் ஒரு பத்திரிகையாளர் போனில் தொடர்புகொண்டபோது, “மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸின் கருத்தை நான் வரவேற்கிறேன். புகைப்பழக்கத்துக்கு எதிரான அவருடைய போராட்டம், ஆரோக்கியமான விஷயம்தான். அவருடைய வேண்டுகோளை ஏற்று, இனிமேல் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்.

என்னுடைய நடிப்பில் சமீபத்தில் திரைக்குவந்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில், இரண்டு வேடங்களில் நடித்தேன். அதில், கெட்டவன் கதாபாத்திரமும் ஒன்று. அந்தக் கதாபாத்திரம் கெட்டவன் என்பதைக் காட்டுவதற்காகவே, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியை இயக்குநர் வைத்தார். இறுதியில் அவன் திருந்துவதைக் காட்டுவதற்காகத்தான் சிகரெட்டைத் தூக்கி எறிவது போன்ற காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இனிமேல், அதுபோன்ற காட்சிகளைக் கூடத் தவிர்க்க முயற்சி செய்கிறேன்” என்று கூறினார் விஜய்.

ஆனால், அதன்படி நடக்காமல், சிகரெட் பிடிப்பது போல் போஸ் கொடுத்துள்ளார் விஜய். இதேபோல், 2012-ம் ஆண்டு வெளியான ‘துப்பாக்கி’ படத்தின் போஸ்டரிலும் சுருட்டு பிடிப்பது போன்று போஸ் கொடுத்திருப்பார் விஜய்.

Leave a comment

Your email address will not be published.