கொரோனாவால் வேலையிழந்தோருக்கு இஎஸ்ஐ மூலம் 50% சம்பளம் – மத்திய அரசு முடிவு

கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையிழந்த பணியாளர்களுக்கு உதவும் வகையில் தொழிலாளர் ஈட்டுறுதி வாரியம் (இஎஸ்ஐ) மூலம் அவர்கள் பெற்ற ஊதியத்தில் 50 சதவீத தொகையை 3 மாதங்களுக்கு வழங்கும் வகையில் வகையில் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“ஏப்ரல் 1, 2018 முதல் மார்ச் 31, 2020 வரையான காலத்தில் இஎஸ்ஐ பங்களிப்பை செலுத்திய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த அலவன்ஸ் தொகை கிடைக்கும். மார்ச் 24 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையான காலத்துக்காக இந்த அலவன்ஸை பெறலாம்.

ஊழியர்கள் இஎஸ்ஐ உறுப்பினர்களாக 2 ஆண்டுகள் இருந்திருக்கவேண்டும். அதாவது ஏப்ரல் 1, 2018 முதல் மார்ச் 31, 2020 வரை அவர்கள் உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும். இந்தகால கட்டத்தில் அவர்களது பங்களிப்பு குறைந்தபட்சம் 78 நாட்களுக்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அக்டோபர் 1, 2019 முதல் மார்ச் 31, 2020 வரையான காலத்தில் உறுப்பினர் பங்களிப்பு செலுத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.

இந்த நடவடிக்கை மூலம் 30 லட்சம் முதல் 35 லட்சம் ஊழியர்கள் பயனடைவர் என்று பாரதீய மஸ்தூர் சங்கத்தின் தேசிய செயல் உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஊழியர்களின் தினசரி ஊதியத்தில் 25 சதவீத தொகையை அவர்களது முந்தைய இஎஸ்ஐ பங்களிப்பில் நான்கு தவணைகளின் அடிப்படையில் பெற முடியும். பணிக்காலத்தில் ஒரு முறை இத்தகைய வேலையின்மை கால அலவன்ஸை 90 நாட்களுக்குப் பெறமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அளவானது தற்போது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.