சட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்படும்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதி

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க சட்டங்கள் திருத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுமார் 1.1 கோடி வெளிநாட்டினர் சட்டவிரோதமாக குடியேறியிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கு எல்லை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சி செய்து வருகின்றனர். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 2,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தடுப்பு மையங்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறியதாவது: மெக்ஸிகோவில் பிடிபடும் வெளிநாட்டினர் சில மணி நேரங்களில் அந்த நாட்டை விட்டு வெளியேற்றப்படுகின்றனர்.

ஆனால் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி கைது செய்யப்படுபவர்கள் 6 ஆண்டுகளானாலும் நாட்டை விட்டு வெளியேறுவதில்லை. சட்ட நடவடிக்கைகளின் மூலம் அவர்கள் தொடர்ந்து அமெரிக்காவிலேயே தங்கியிருக்கின்றனர்.

ஜனநாயக கட்சி தலைவர்களுக்கு எல்லைப் பாதுகாப்பு குறித்தோ, சட்டம் ஒழுங்கு குறித்தோ கவலையில்லை. எல்லையை திறந்துவைக்குமாறு அவர்கள் கூறுகின்றனர். அதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும். சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதே எனது முதல் பணி. அதற்காக சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதே விவகாரம் குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறியதாவது: சட்டவிரோத குடியேறிகளை அகற்றுவது பெரும் சிக்கலாக உள்ளது. சுமார் 5 ஆண்டுகள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகே அவர்களை வெளியேற்ற முடிகிறது. இதை மாற்ற குடியேற்ற சட்டங்களில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நீதிமன்ற விசாரணை இன்றி சட்டவிரோத குடியேறிகள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் நீதிமன்ற விசாரணை இன்றி அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இந்நிலையில் ஷெரிடியன் தடுப்பு மைய அகதிகள் வழக்கில் அதிபரின் நடவடிக்கைக்கு எதிராக நீதிபதி மைக்கேல் சைமன் உத்தரவிட்டிருப்பதை மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்களுக்கு சட்ட உதவி

வாஷிங்டன் அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்ததாக சுமார் 100 இந்தியர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இதில் 52 பேர் ஒரிகான் மாகாணம், ஷெரிடியன் நகரில் உள்ள தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட ஷெரிடியன் தடுப்பு மையத்தில் உள்ள 121 பேர் தங்களுக்கு சட்ட உதவி வழங்கக் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி மைக்கேல் சைமன் விசாரித்தார். அவர் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா சட்டத்தை மதிக்கும் நாடு. அந்த வகையில் சட்டவிரோத குடியேறிகளுக்கும் சட்ட உதவி கிடைக்க வேண்டும். ஷெரிடியன் தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டிருக்கும் 121 பேரும் அவரவர் வழக்கறிஞர்களைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

Leave a comment

Your email address will not be published.