சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கான தடை அரசியலமைப்புக்கு எதிரானது; கேரள அரசு வாதம்: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்கள் வழிபாடு நடத்த தடைவிதிப்பது என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கேரள அரசு  உச்ச நீதிமன்றத்தில் தனது இறுதிவாதத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 41 நாள் கடும்விரதம் இருந்து இருமுடி சுமந்துவரும் ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்டப்பட்டவர்களுக்கு அனுமதியில்லை.

நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.

இந்த வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தலைமையிலான நீதிபதிகள் பாலிநாரிமன், ஏஎம் கான்வில்கர், டிஓய் சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கைக் கடந்த 8 நாட்களாக விசாரித்து வந்தனர். இன்று இறுதி விசாரணை நடந்தது.

முன்னதாக, இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுவரை உள்ள பெண்கள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை எனக் கேள்வி எழுப்பியது. மேலும் இது பாலின சமத்துவத்துக்கு எதிரானது என்றும் கருத்து தெரிவித்தது.

கடந்த 18-ம் தேதி விசாரணை வந்த போது, “ வழிபாடு செய்வது அனைவருக்கும் உள்ள சட்டப்படியான உரிமை. குறிப்பிட்டவர்களைக் கோயிலுக்கு வரக்கூடாது எனக் கூறுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அரசியல் சட்டம் பெண்களுக்கு வழிபாட்டு உரிமையை வழங்கியுள்ளது “ எனத் தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தலைமையிலான நீதிபதிகள்பாலி நாரிமன், ஏஎம் கான்வில்கர், டிஓய் சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல்சாசன அமர்வு முன் இன்று இறுதி விசாரணைக்கு வந்தது.

அப்போது கேரள அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜெயதீப் குப்தா ஆஜராகினார். அவர் வாதிடுகையில், “ 10 வயதுமுதல் 50 வரையிலான பெண்களை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழையத் தடைவிதிப்பது என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது.

ஒரு இந்துக் கோயிலுக்கு பிரம்மச்சாரி அந்தஸ்து என்ற அடிப்படையில், பெண்களை அனுமதிக்கத் தடைவிதிக்க முடியாது. சபரிமலை கோயில் என்பது ஒரு இந்துக் கோயில். இந்தக் கோயில் குறிப்பிட்ட எந்த ஒரு தன்னாட்சி அமைப்பு ஏதும் கொண்டிருக்கவில்லை. பெண்களுக்கு தடைவிதிக்கப்படும் போது, இங்கு பக்தர்களின் உரிமை பாதுகாக்கப்படவில்லை என்ற கருத வேண்டும்.

பிரம்மச்சரியம் என்ற அடிப்படையில் பெண்களை கோயிலுக்கு வரவிடாமல் தடுக்க முடியாது. நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் என்பது சமூகத்தில் பல்வேறு சீர்திருத்தத்தங்களை நடைமுறைப்படுத்திய வலிமையுடையது. நாம் இன்னும் கடந்த காலத்துக்குப் பின்னோக்கிச் சென்றால், சீர்திருத்தங்கள் ஏதும் நடக்காது என்று வாதிட்டார்.

மனுதாரர்களுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் ஆஜராகினார். அவர் வாதிடுகையில், “தலித்துகளைக் கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்ற நிலை இருந்தபோது, பல்வேறு தடைகளையும், மூட நம்பிக்கைகளையும், பழக்கங்களையும், மரபுகளையும் சட்டத்தின் மூலம் நீதிமன்றம் உடைத்துள்ளது. அதேபோல, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை நுழைய அனுமதிக்க முடியாது என்ற தடையை சட்டத்தின் உதவியால் நீதிமன்றம் உடைக்க வேண்டும்.

கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது என்பது ஆண், பெண் பாலினத்தின் அடிப்படையில் வேறுபடுத்துவதை அனுமதிக்க முடியாது. இந்த வேறுபாட்டை, பாகுபாட்டை நீதிமன்றம் உடைக்க வேண்டும்.

அதிலும் குறிப்பாக கோயிலுக்குப் பெண்களை நுழையாக விடாமல் தடுப்பது என்பது பெண்களின் மாதவிடாய் காலத்தை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பெண்களுக்கு இடையே பாகுபாடு பார்த்து 10 வயது முதல் 50 வயது வரை எனப் பிரிக்கப்படுகிறது. ஆண், பெண் என்ற வேறுபாடு மட்டுமின்றி, பெண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபாடு பார்ப்பதாகும்” எனத் தெரிவித்தார்.

மேலும், நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட இரு வழக்கறிஞர்கள் ராஜு ராமச்சந்திரன், கே.ராமமூர்த்தி ஆகியோரின் வாதங்களையும் நீதிபதிகள் கேட்டனர்.

அதன்பின் நீதிபதிகள் கூறுகையில், “ நாங்கள் உத்தரவுகளைப் பிறப்பிப்போம். அதுவரை தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது. அடுத்த 7 நாட்களுக்குள் வழக்கறிஞர்கள் அனைவரும் தங்கள் வாதங்களை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்ய வேண்டும்” என அறிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published.