சர்வதேச யோகா தினத்தையொட்டி மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்றுமுதல் 4 நாட்களுக்கு இலவசமாக யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
சென்னையில் தற்போது சுமார் 35 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி 55 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மக்களிடம் யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்றுமுதல் 4 நாட்களுக்கு இலவசமாக யோகா மற்றும் தியானப் பயிற்சி கள் அளிக்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:
“சர்வதேச யோகா தினத்தையொட்டி உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப் படுகின்றன. மெட்ரோ ரயில் நிலையங்களிலும் 21-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் யோகா மற்றும் தியானப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சுத்தவெளிசபை தியானப் பயிற்சி மையத்துடன் இணைந்து நடத்தும் க்ரியா மற்றும் யோகாசனங்கள் அடிப்படையிலான இந்த யோகா பயிற்சியை அனைத்து தரப்பினரும் செய்யலாம்.
தினமும் ஒரு மணிநேரம் இப் பயிற்சிகளை செய்வதால், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் உட்பட பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கவும், நோயின் தாக்கத்தை குறைக்க வும் முடியும்.
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 21-ம் தேதி (இன்று) காலை 6.30 மணிக்கும், எழும்பூரில் மாலை 6 மணிக்கும் யோகா மற்றும் தியானப் பயிற்சி தொடங்குகிறது. 22-ம் தேதி காலையில் சைதாப்பேட்டை, மாலையில் டிஎம்எஸ், 23-ம் தேதி காலையில் வடபழனி, மாலை யில் அண்ணாநகர் டவர், 24-ம் தேதி காலையில் திருமங்கலம், மாலை ஷெனாய் நகரில் பயிற்சி நடக்கிறது. சுமார் ஒரு மணிநேரம் இப்பயிற்சி நடக்கும். இந்த பயிற்சியில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் பங்கேற்கலாம்” என்றனர்.