ஒரு பாடலைப் படமாக்க வேண்டி இருப்பதால், சாய் பல்லவி எப்போது வருவார் எனக் காத்திருக்கிறார் தனுஷ்.
தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாரி 2’. ஏற்கெனவே வெளியான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிவரும் இந்தப் படத்தை, பாலாஜி மோகன் இயக்குகிறார். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர், ‘கல்லூரி’ வினோத், அஜய் கோஷ், வித்யா பிரதீப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா ஜி.கே. எடிட் செய்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதமே இந்தப் படத்தின் 40 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டது. மார்ச் முதல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் நடைபெற்றதால், ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் இறுதியில் மீண்டும் ஷூட்டிங் தொடங்கி, சமீபத்தில் சண்டைக் காட்சியுடன் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.
ஆனால், இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கியிருக்கிறது. தனுஷுடன் சாய் பல்லவி டூயட் பாடும் இந்தப் பாடலைப் படமாக்க தனுஷ் தயாராக இருக்கிறார். ஆனால், சாய் பல்லவி சூர்யாவுடன் ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்து வருவதால், அவரால் தேதிகள் ஒதுக்கித் தர முடியவில்லை.
செல்வராகவன் இயக்கும் ‘என்.ஜி.கே.’ படமும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு ஒரே ஷெட்யூலில் மீதமுள்ள காட்சிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளதால், அங்கு பிஸியாக இருக்கிறார் சாய் பல்லவி. எனவே, அவர் ‘என்.ஜி.கே.’ படத்தை முடித்துவிட்டு வரும்வரை காத்திருக்க முடிவு செய்துள்ளார் தனுஷ்.
1 comment