சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீஸில் ஒப்படைத்த ஈரோடு சிறுவன் முகமது யாசினுக்கு தங்கச்சங்கிலி அணிவித்து பாராட்டிய ரஜினி

சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை, பள்ளி ஆசிரியை மூலமாக காவல்துறையினரிடம் சேர்த்த, ஈரோடு மாணவர் முகமது யாசினை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டினார்.

ஈரோடு கனிராவுத்தர் குளம் நந்தவனத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாட்ஷா – அப்ரூத்பேகம் தம்பதியினரின் மகன் முகமது யாசின் (7). சின்னசேமூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 11-ம் தேதி பள்ளி சென்றபோது, சாலையில் பணக்கட்டு கிடந்துள்ளது. ஐநூறு ரூபாய் நோட்டுகள் அடங்கிய அந்த நோட்டுக் கட்டை தனது பள்ளி ஆசிரியையிடம் கொடுக்க, தலைமையாசிரியை யாஸ்மின் மூலமாக ஈரோடு எஸ்பி சக்தி கணேசனிடம் ஒப்படைக்கப்பட்டது. 100 எண்ணிக்கையில், ஐநூறு ரூபாய் நோட்டுகள் கொண்ட அந்த பணக்கட்டில் ரூ.50 ஆயிரம் இருந்துள்ளது.

பிறருக்கு சொந்தமான பணத்தை மறைக்கவோ, வைத்துக் கொள்ளவோ விரும்பாத முகமது யாசினின் நேர்மையை, எஸ்பி சக்திகணேசன் பாராட்டி, சீருடை, புத்தகப்பை, காலணி ஆகியவற்றை வழங்கினார். மேலும், வரும் 19-ம் தேதி சிறுவனுக்கு பாராட்டு விழாவும் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை குஷ்பு, எஸ்.வி.சேகர், நடிகர் சூர்யா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும், முகமது யாசினின் தந்தை பாட்ஷாவைத் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். யாசினின் கல்விச்செலவை ஏற்பதாக அவர்கள் தெரிவித்த நிலையில், ‘எனது மகன் அரசுப் பள்ளியில் படிப்பதையே நான் விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார் பாட்ஷா.

ரஜினி பாராட்டு

இந்நிலையில் ஈரோடு மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் முருகேஷ், ரஜினி மக்கள் மன்ற ஈரோடு மாவட்டச் செயலாளர் எம். சாம்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் முகமது யாசினின் வீட்டுக்குச் சென்று பாராட்டு தெரிவித்தனர். அப்போது, ரஜினிகாந்த்தை சந்திக்க வேண்டுமென முகமது யாசின் விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மக்கள் மன்ற நிர்வாகிகள் மூலமாக ரஜினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முகமது யாசின் குறித்த செய்தியை ஏற்கெனவே அறிந்து இருந்த ரஜினிகாந்த், உடனே சென்னை அழைத்து வருமாறு தெரிவித்துள்ளார்.

நேற்று காலை முகமது யாசின் தனது பெற்றோர் மற்றும் சகோதரர் முகமது முஜமில் ஆகியோர் போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியைச் சந்தித்தனர். முகமது யாசினுக்கு தங்கச்சங்கிலி அணிவித்து பாராட்டிய ரஜினிகாந்த், அவரது பெற்றோருக்கும் பாராட்டு தெரிவித்தார்.

பெற்றோர் உருக்கம்

இதுகுறித்து முகமது யாசினின் பெற்றோர் கூறும்போது, ‘ரஜினியைச் சந்திப்போம் என கனவில்கூட நினைக்கவில்லை. மிக எளிமையாக எங்களிடம் பேசினார். முகமது யாசினை சிறப்பாக வளர்த்துள்ளீர்கள் என்று பாராட்டினார்.

எப்போது உதவி தேவையென்றாலும் என்னை அணுகலாம் என்று தெரிவித்தார். என் குழந்தையைப் போல் பார்த்துக் கொள்வேன் என்று அவர் சொன்னபோது நெகிழ்ந்து விட்டோம்’ என்றனர்.

Leave a comment

Your email address will not be published.