சிவதொண்டால் இறையடி சேர்ந்த அம்மையார்

சைவ சமயத்தை வளர்த்த சான்றோர்களில் பெண்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அதில் மிக மிக முக்கியமானவர்கள் திலகவதியார், மங்கையர்கரசியார் மற்றும் காரைக்கால் அம்மையார் போன்றவர்கள். இவர்களில் காரைக்கால் அம்மையார் குறிப்பிடத்தக்கவர். இறைவனின் திருவடியில் இருக்கும் பேறு பெற்றவர். 63 நாயன்மார்களில் ஒரே ஒரு பெண் நாயன்மாராக இருக்கும் பெருமைக்குரியவர் இவர்.

காரைக்காலில் உள்ள சிறந்த வணிகர் குலத்தைச் சேர்ந்த தனதத்தன் என்பவருக்கு மகளாக பிறந்தவர் புனிதவதி. இவர் சிறுவயது முதல் சிவ பக்தியிலும், சிவனடியார்களுக்கு தொண்டு புரிவதிலும் சிறந்து விளங்கினார். இவர் பருவ வயதை அடைந்ததும், நாகப்பட்டினத்தில் உள்ள நிதிபதி என்ற வணிகரின் மகன் பரமதத்தனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். திருமணத்துக்கு பின் பரமதத்தன் காரைக்காலிலேயே தங்கி வணிகத்தில் சாதனை புரிந்து வந்தார். புனிதவதியோ திருமணத்துக்கு பிறகும் சிவனடியார்களுக்கு அன்னம், பொன், பொருட்களை கொடுத்து சிவ தொண்டு செய்து வந்தார்.

ஒரு நாள் வணிகரான பரமதத்தனுக்கு அவரது நண்பர்கள் இரு மாங்கனிகளைக் கொடுத்தனர். அவற்றை தனது வேலையாட்கள் மூலம் வீட்டிற்கு கொடுத்து அனுப்பினான். அதனை புனிதவதி பெற்றுக் கொண்டு தனது கணவனின் வரவுக்காக காத்திருந்தார்.

அந்த சமயத்தில், சிவபெருமான் அடியார் வேடம் கொண்டு கடுமையான பசியுடன் புனிதவதியின் வீட்டு வாசலில் வந்து நின்றார். அவரைக் கண்ட புனிதவதி ‘‘அடுப்பில் உலை வைத்து இருக்கிறேன், சற்று பொறுங்கள்.’’ என்றார். அதற்கு சிவனடியார் ‘‘அம்மா! தாயே! பசியில் உயிர் போகிறது, ஏதேனும் இருப்பதைக் கொடும்மா!’’ என்றார்.

அப்போது புனிதவதியாருக்கு தனது கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனிகள் நினைவுக்கு வந்தது, உடனே அவற்றில் ஒன்றை எடுத்து வந்து சிவனடியாருக்கு கொடுத்து மகிழ்ந்தார். மாங்கனியை உண்டு மகிழ்ந்த சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமானும் புனிதவதியை வாழ்த்தி மறைந்தார்.

வெளியில் வியாபாரத்திற்கு சென்றிருந்த பரமதத்தன், தன் மனைவி புனிதவதியை அழைத்தவாறு வீட்டிற்குள் நுழைந்தார். பிறகு மதிய உணவு உண்பதற்காக அமர்ந்த பரமதத்தன், தனது மனைவி புனிதவதியை பார்த்து, ‘‘மதிய உணவிற்கு பின் உண்பதற்காக கொடுத்து அனுப்பிய மாங்கனிகளை எடுத்து வா!’’ என்றான். பதறிப் போன புனிதவதி சிவனடியாருக்கு கொடுத்த ஒரு மாங்கனி போக மீதம் இருந்த மற்றொரு மாங்கனியை தன் கணவனிடம் கொண்டு வந்து நீட்டினாள். அக்கனியை உண்ட பரமதத்தன், அதன் சுவை காரணமாக அடுத்த மாங்கனியையும் உண்ண விரும்பி, புனிதவதியை நோக்கி, ‘‘இரண்டாவது மாங்கனியையும் எடுத்து வா!’’ என்றான்.

இதைக் கேட்ட புனிதவதி, சிவனடியாருக்கு மாங்கனியை கொடுத்ததைச் சொன்னால் தன் கணவன் கோபம் கொள்வாரே! என்று எண்ணி பூஜை அறைக்கு சென்று சிவபெருமானிடம் மாம்பழம் வேண்டி துதித்தாள். சிவனடியாராக வந்தவர் சிவபெருமானாயிற்றே! எனவே அவர் உடனே புனிதவதிக்கு மாங்கனியை அருளினார். அதனை பெற்றுக் கொண்ட புனிதவதி, தன் கணவன் பரமதத்தனிடம் மாங்கனியை கொடுத்தாள். அக் கனியை சுவைத்த பரமதத்தனுக்கு தான் முன்பு உண்ட மாங்கனியை விட இக்கனி மிகவும் சிறப்பான சுவையுடன் இருந்ததால், புனிதவதியிடம் மாங்கனி சுவையின் வேறுபாடு பற்றி கேட்டான்.

கணவனின் கேள்விக்கு பொய் சொல்ல விரும்பாத புனிதவதி நடந்தவற்றை மறைக்காமல் தனது கணவனிடம் தெரிவித்தாள். இதனைக் கேட்ட பரமதத்தன், அப்படியானால் சிவபெரு மானிடம் இருந்து இன்னொரு மாங்கனி பெற்றுத் தருமாறு வேண்டினான். புனிதவதியும் சிவபெருமானை வேண்ட இன்னொரு மாங்கனியும் கிடைத்தது. இதனைக் கண்ட பரமதத்தன் தன் மனைவி ஒரு தெய்வம் என்று எண்ணி அவளது காலில் விழுந்து வணங்கினான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பரமதத்தனுக்கு தனது மனைவியிடம் ஒட்டி உறவாட மனம் இல்லை. எனவே வணிகத்தில் முழு கவனத்தையும் செலுத்தினான்.

வியாபாரம் சம்பந்தமாக பாண்டிய நாடு வந்த பரமதத்தன், குலசேகரன் பட்டிணத்தில் தங்கி வணிகம் செய்ய ஆரம்பித்தான். பிறகு அங்கேயே ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்து வந்தான். அந்த பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தனது முதல் மனைவியின் பெயரான புனிதவதி என்று பெயரிட்டு அழைத்து வந்தான்.

இந்த தகவலை அறிந்த புனிதவதியார் குலசேகரன்பட்டிணம் வந்து, ஊர் எல்லையில் உள்ள ஒரு மண்டபத்தில் அமர்ந்து கொண்டு கணவனுக்கு அழைப்பு விடுத்தார். தனது 2–வது மனைவி, மகளுடன் வந்து முதல் மனைவியான காரைக்கால் அம்மையார் காலில் விழுந்து வணங்கி, பழைய மாங்கனி சம்பவத்தை கூறி அங்கு கூடியிருந்த மக்களையும் வணங்க வைத்தான்.

கணவனே தன்னை தெய்வம் என்று கூறி காலில் விழுந்து வணங்கியதால் இனி தன் அழகு உடல் தனக்கு தேவையில்லை என்று எண்ணி, எலும்போடு கூடிய பேய் உருவம் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார். அதன்படி பேய் உருவம் பெற்று அற்புதத் திருவந்தாதி பாடல்களை பாடினார். பின்பு காரைக்கால் சென்று அம்மை அப்பரை வணங்கி அங்கிருந்து கயிலாயம் புறப்பட்டுச் சென்றார்.

சிவபெருமான் இருக்கும் கயிலாயத்தை காணச் செல்லும்போது காலால் நடப்பது குற்றம் என்று எண்ணிய புனிதவதியார், தனது தலையாலேயே நடந்து சென்றார். அவரைக் கண்ட பார்வதி தேவி, ‘‘பேய் உருவில், தலைகீழாக நடந்து வரும் இந்தப் பெண் யார்?’’ என்று சிவபெருமானிடம் கேட்டார். அதற்கு இறைவன், ‘‘இவள் நம்மை பேணும் அம்மை’’ என்று கூறிக் கொண்டு, ‘‘அம்மையே! நலமாக வந்தனையோ? நம்மிடம் வேண்டுவது யாது?’’ என்று புனிதவதியை நோக்கி கேட்டார்.

அகிலத்துக்கும் அம்மையப்பனாக விளங்கும் சிவபெருமானே ‘அம்மையே’ என்று புனிதவதியை அழைத்ததால் காரைக்கால் அம்மையார் எனப் பெயர் பெற்றார். காரைக்கால் அம்மையிடம் இறைவன் என்ன வேண்டும் என்று கேட்டதற்கு, ‘‘இறைவா! உன்மீது என்றும் நீங்காத அன்போடு நான் இருக்க வேண்டும். பிறவாமை வேண்டும், மீண்டும் பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும். அனுதினமும் உன் திருவடியின் கீழ் இருந்து என்றும் உன் திருநாமத்தை பாடிக் கொண்டிருக்கும் வரம் வேண்டும்’’ என்றார் காரைக்கால் அம்மையார்.

உடனே சிவபெருமான், ‘‘அம்மையே! நீவீர் பூலோகத்தில் உள்ள திருவாலங்காட்டில் எனது திருவடியின்கீழ் இருந்து பாடும் வரம் தந்தோம்’’ என்று அருளினார். அதன்படி இன்றும் திருவாலங்காட்டில் உள்ள நடராஜப் பெருமானின் ரத்தின சபையில் காரைக்கால் அம்மையார் அமர்ந்து சிவபெருமானின் நடனத்தை கண்டு கழிப்பதாக ஐதீகம்.

இத்தகைய சிறப்பு பெற்ற காரைக்கால் அம்மையார் சிவபெருமானுக்கு மாங்கனி படைத்தது, சிவபெருமானிடம் அம்மையார் மாங்கனி பெற்றது போன்ற நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பவுர்ணமி அன்று காரைக்காலில் உள்ள ‘காரைக்கால் அம்மையார்’ திருக்கோவிலில் மாங்கனி திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published.