சீனாவில் வெளியாகும் ரஜினியின் ‘2.0’👇🏾🌐

சீனாவில் வெளியாகும் ரஜினியின் ‘2.0’👇🏾🌐

ஹாலிவுட் படங்களுக்கு சீனா பெரிய வர்த்தக சந்தையாக உள்ளது. அங்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் ஹாலிவுட் படங்களை திரையிட்டு வசூல் அள்ளுகிறார்கள்.

இப்போது இந்திய திரைப்படங்களும் சீனாவை குறிவைக்கின்றன. முதன் முதலாக அமீர்கானின் 3 இடியட்ஸ் படம் சீனாவில் வெளியாகி 13 கோடிக்கு மேல் வசூலித்தது.

அதன்பிறகு அமீர்கானின் தூம், ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர், மை நேம் இஸ் கான் ஆகிய படங்களும் சீனாவில் திரையிடப்பட்டன. இதுபோல் ‘பிகே’ படமும் சீனாவில் 4 ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் வெளியாகி ரூ.100 கோடி வசூலித்தது. பாகுபலியும் சீனாவுக்குள் நுழைந்தது.

பின்னர் அமீர்கானின் ‘தங்கல்’ படம் சீனாவில் வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து இந்திய பட உலகினரை ஆச்சரியப்படுத்தியது. தமிழ் படங்களையும் சீனாவில் திரையிட தொடங்கி உள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் நடித்த ‘2.0’ படத்தை கடந்த ஜூலை மாதமே சீனாவில் திரையிட திட்டமிட்டனர்.

இதனை ஏ.ஆர்.ரகுமானும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். ஆனால் சில பிரச்சினைகளால் 2.0 அங்கு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது சீனாவில் இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் 6-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த படம் உலகம் முழுவதும் ரூ.800 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. சீன வசூலையும் சேர்த்தால் ரூ.1000 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.