ஒரு கிராமத்தில் வசிக்கும் 12 முதல் 20 ஏழை பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்டதே பெண்கள் சுய உதவிக் குழு. சுய உதவிக் குழுக்கள் எப்படி உருவாக்குவது மற்றும் அதற்கான பயன்பாடுகள் குறித்து பார்ப்போம்,
* வருமானம், கல்வியறிவு, வேலையின்மை, சொத்து அடிப்படையில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள 21 வயது முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் சுய உதவிக்குழு தொடங்கலாம். அப்படி தொடங்கப்பட்ட குழு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தில் (என்.ஜி.ஓ) மூலம் மாவட்ட மகளிர் திட்டத்தில் இணையலாம். அந்தக் குழுவில் கல்வியறிவு பெற்ற ஒருவர் செயல் இயக்குனராகவும், விபரம் தெரிந்தவர் இயக்குனராகவும், மற்றும் இரண்டு பிரதிநிதிகள் கொண்ட செயற்குழுவினை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
வங்கிக் கடன், திட்ட அறிக்கை!
தொழிலுக்கான வங்கிக் கடன் பெற, முறையான திட்ட அறிக்கை அவசியம். அதற்கு…
* குறிப்பிட்ட தொழிலை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை வலுவாகச் சொல்ல வேண்டும். என்ன தொழில் செய்யப்போகிறீகர்கள், எத்தனை பேர் அந்த குழுவில் அல்லது நீங்கள் ஒருவராக தொழில் தொடங்க இருக்கிறீர்களா போன்ற விபரங்களை விரிவாகத் தெரிவிக்க வேண்டும்.
* நீங்கள் தொடங்கவிருக்கும் தொழில், சூழலுக்கு பொருத்தமான தொழிலா, இதன் உத்தேச வருமானம், லாபம் எவ்வளவு? உற்பத்தித் தொழில் எனில் அதன் சந்தை நிலவரம் எப்படி இருக்கிறது? என தொழில் சம்பந்தப்பட்ட தகவல்களை விளக்கமாகவும், தெளிவாகவும் திட்ட அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.
* வீட்டில் இருந்து செய்யக்கூடிய தொழிலா அல்லது தனியாக இடம் பிடித்து ஆரம்பிக்க வேண்டுமா? முதலீட்டு மூலப்பொருட்கள் என்னென்ன, இயந்திரங்கள் வாங்க வேண்டி வருமா போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும். அவற்றை எந்த நிறுவனத்திடம் இருந்து பெறுகிறீர்களோ அவர்களின் முழு விபரம் மற்றும் தொழில் முகவரியைக் குறிப்பிட வேண்டும். அந்த தொழிலுக்கு எத்தனைப் பேர் தேவைப்படுகிறார்கள் என்பதையும் அதில் குறிப்பிட வேண்டியது அவசியம்.
* நீங்கள் தொடங்கவிருக்கும் தொழிலுக்காக பயிற்சிப் பெற்றிருப்பீர்கள். அப்படி பயிற்சிப் பெற்றிருப்பின் அதற்கான சான்றிதழை இதனுடன் இணைக்க வேண்டும். பரம்பரைத் தொழிலை தொடர்ந்து செய்பவராக இருப்பின் அதற்கான விளக்கதினை குறிப்பிட வேண்டியது அவசியம்.