சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு : வயல், வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி 5 மாவட்ட விவசாயிகள் போராட்டம்

சேலம் : சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று கறுப்புக் கொடி போராட்டம் நடத்துகின்றனர். காஞ்சிபுரம் , திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் விவசாயிகள் நடத்தும் கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது.சேலம் – சென்னை 8 வழி பசுமை விரைவுச்சாலை 10ஆயிரம் கோடியில் அமைக்கப்படுகிறது.

சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 277 கிலோமீட்டரில் அமையும் இந்த சாலைக்கு சேலம், தர்மபுரி மாவட்டங்களில் மட்டும் 92 கிலோ மீட்டரில் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கான நிலம் அளவீட்டு பணிகள் கடந்த 18ம்தேதி தொடங்கியது. தர்மபுரியில் நேற்று முன்தினம் பணிகள் முடிந்தது.277 கிலோமீட்டரில் அமையும் இந்த சாலை விவசாய நிலங்களை அழித்து தான் அமைக்கப்படுகிறது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிலோ மீட்டருக்கு இந்த பசுமைவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தை கைவிட வேண்டும் என்றும்  தொடர்ச்சியாக கிராம மக்கள் போராடி வருகின்றனர். இதனிடையே இந்த திட்டத்திற்கு எதிராக போராடியவர்களை போலீசார் முன்னெச்சரிக்கை கைது செய்த வண்ணம் வந்தனர். சிலர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்கவும் முயன்றனர். இந்நிலையில் இன்று 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் தங்களுடைய விவசாய நிலங்களிலும்,வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றினர். இந்த போராட்டத்திற்கு சமூக ஆர்வலர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேபோல இன்று திருவண்ணாமலையில் இருந்து பதிவு தபாலை பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பலத்துறை அமைச்சர்களுக்கும் அனுப்புவதற்காக விவசாயிகள் தயார் நிலையில் உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.