செயற்கை முறையில் பழுக்க வைத்த 2.75 டன் மா, வாழைப்பழங்கள் பறிமுதல்…

சேலத்தில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 2.75 டன் மா மற்றும் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேலம் சின்னக்கடை வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பழக்கடைகள் உள்ளன. மேலும், அங்குள்ள குடோன்களில் மா, வாழை உள்ளிட்ட பழங்களை இருப்பு வைத்து, வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்க புகை மூட்டுதல் மற்றும் எத்திலின் காஸ் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள பழக் குடோனில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள்.

ஆனால், சட்ட விதிமுறைக்கு முரணாக சோடா உப்பில் தண்ணீர் கலந்து பழங்கள் மீது தெளித்து, செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று சின்னக்கடை வீதி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பன்னீர்செல்வம், பாபு, காளிமுத்து ஆகியோரது குடோன்களில் சோடா உப்பை தண்ணீரில் கலந்து பழங்களில் தெளித்து செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்திருப்பது தெரிந்தது.

இதையடுத்து, மூன்று குடோன்களில் இருந்து 2.75 டன் மா மற்றும் வாழைப்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

Leave a comment

Your email address will not be published.