செய்தித் துளிகள்: ஃபிபா உலகக் கோப்பையை சுமக்கும் இந்தியர்கள்

இந்தியா, பாகிஸ்தான், கென்யா, ஈரான், கொரியா, அர்ஜென்டினா ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் கபடி மாஸ்டர்ஸ் தொடர் துபையில் வரும் 22-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா முதல் ஆட்டத்தில் 22-ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது.

உடல் தகுதிக்கான யோ-யோ தேர்வில் தோல்வியடைந்ததை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டெல்லியை சேர்ந்த நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார். சைனி, முதல் தர போட்டிகளில் 31 ஆட்டங்களில் 96 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

ஃபிபா உலகக் கோப்பையில் பந்தை சுமந்து செல்வதற்காக இந்தியாவில் இருந்து கர்நாடகாவை சேர்ந்த ரிஷி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நதானியா ஜான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பனாமா – பெல்ஜியம் அணிகள் மோதும் ஆட்டத்திலும், மற்றொருவர் பிரேசில் – கோஸ்டா ரிகா அணிகள் மோதும் ஆட்டத்திலும் பந்தை சுமந்து செல்ல உள்ளனர்.

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நம்பர் ஒன் அணியான இங்கிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. 371ரன்களை விரட்டிய இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 365 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Leave a comment

Your email address will not be published.