சேலம்: சேலத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து கொண்டிருந்த நிலையில் நேற்று இரவு தொடர்ந்து 3 மணி நேரம் கனமழையாக பெய்தது. இதனால் அம்மாபேட்டை, கிச்சிபாளையம் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. சேலம் மாநகராட்சி 40வது வார்டு உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இரவில் தொடர்ச்சியாக மழை பெய்ததின் காரணமாக வீடுகள் அனைத்தும் மழைநீர் தேங்கிய நிலையில் உள்ளது. குறிப்பாக கழிவுநீர் மற்றும் மழைநீர் கலந்து வீடுகளினுள் புகுந்துள்ளதால் மக்கள் விடியவிடிய தவித்து வருகின்றனர். மக்கள் அனைவரும் தற்போது வீதியில் உள்ளனர். குறிப்பாக அசோக் நகர் பகுதியில் ராஜா வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருப்பதன் காரணமாக இந்த வாய்க்காலில் தண்ணீர் வெளியேற முடியாததால் வீடுகளில் புகுந்துள்ளது. இதனால் மக்கள் நேற்று இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது வரை மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் மக்கள் அனைவரும் மிகுந்த ஆவேசத்தில் உள்ளனர்.
அசோக்நகர் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று தெருவில் நிற்பதாகவும், இரவு முழுவதும் தூங்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். வீடுகளில் மழைநீர் புகுந்ததால் வீடுகளில் உள்ள அனைத்து பொருட்களும் சேதமாகியுள்ளதால் மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். கடைகளில் மழைநீர் புகுந்துள்ளதால் மளிகை பொருட்கள் அனைத்தும் வீணாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மழைநீர் வடிகால் தொடர்பாக அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தகுந்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலத்தில் விடியவிடிய கனமழை: வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்பு
