சேலம் செல்ல ஏற்கெனவே 3 சாலைகள் இருக்கும்போது 4-வது சாலை யாருக்காக போடப்படுகிறது?- பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி

சென்னையில் இருந்து சேலம் செல்ல ஏற்கெனவே 3 சாலைகள் இருக்கும்போது, 4-வதாக எட்டுவழிச் சாலை யார் நலனுக்காகப் போடப்படுகிறது என்று பாமக இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் சென்னை-சேலம் 8 வழிப்பாதை தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் பாமக சார்பில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் பங்கேற்று மக்களிடம் கருத்துகளைக் கேட்டார்.

சேலம்-சென்னை 8 வழிச்சாலை தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கும் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்.

இந்தக் கூட்டத்தில் ஆண்கள், பெண்கள் உட்பட பலர் அன்புமணியிடம் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். கருத்து தெரிவித்த அனைவரும் தங்களுக்கு வாழ்வாதாரமே இந்த நிலம்தான். இந்த நிலத்தை நாங்கள் ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என்று தெரிவித்தனர். மேலும் மத்திய, மாநில அரசிடம் தங்கள் கருத்துகளைக் கொண்டு சென்று சேலம்-சென்னை பசுமை வழிச் சாலையை நிறுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பின்னர் மக்கள் மத்தியில் அன்புமணி பேசியது:

மக்கள் யாருமே கேட்காத ஒரு சாலையை 3 மாதங்களுக்கு முன்னர் அறிவித்துவிட்டு அவசர அவசரமாகச் செயல்படுத்த நினைக்கின்றனர். இது தொடர்பாக யாரிடமும் கருத்துக் கேட்கவில்லை. ரூ.10 ஆயிரம் கோடியில் செயல்படுத்தும் இந்த சாலைத் திட்டத்தால் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உள்ளதா? சமூக பிரச்சினைகள் உள்ளதா? என்பது குறித்தெல்லாம் ஆராயவில்லை.

சென்னை-சேலத்துக்கு ஏற்கெனவே விழுப்புரம்-உளுந்தூர்பேட்டை வழியாக ஒரு சாலை, வேலூர்-கிருஷ்ணகிரி வழியாக ஒரு சாலை, வாணியம்பாடி-திருப்பத்தூர் வழியாக ஒரு சாலை என 3 சாலைகள் உள்ளன.

வாணியம்பாடி – திருப்பத்தூர் சாலையை விரிவுபடுத்துவதுதான் எளிதானது. அதற்கு மிகக் குறைந்த நிலமே தேவைப்படும்.

ஆனால், படப்பையில் இருந்து சேலத்துக்கு புதிதாக ஒரு 8 வழிச்சாலை அமைக்கத் திட்டமிட்டுவிட்டு 2.15 மணி நேரத்தில் சென்னையில் இருந்து சேலம் செல்ல முடியும் என்கிறார் முதல்வர். படப்பையில் இருந்து சென்னை செல்வதற்கே 2 மணி நேரம் ஆகும். விழுப்புரம், உளுந்தூரபேட்டை வழியாக சேலம் செல்லும் 4 வழிச்சாலை பல இடங்களில் இரு வழிச்சாலையாக உள்ளது. அங்கு விபத்துகள் அதிகம் நடைபெறுகின்றன. இந்தச் சாலையை விரிவுபடுத்தப் பலமுறை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதை எல்லாம் விட்டுவிட்டு அவசர, அவசரமாகப் பலரை கைது செய்துவிட்டு யாருக்காக சேலம்-சென்னை 8 வழிச்சாலை போடப்பட உள்ளது. இந்தப் பாதையில் உள்ள கவுத்தி மலை, வேடியப்பன் மலை, கஞ்சமலை போன்ற இடங்களில் இருப்புத் தாது அதிகம் உள்ளது. இவற்றை எடுத்து இந்த வழியாகக் கொண்டு செல்வதற்காக இந்தப் பாதை அமைக்க அவசரம் காட்டப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளது என்றார்.

இந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்பட பலர் பேசினர். இந்த நிகழ்ச்சியின் முடிவில் புதிய சாலைக்காக அளவெடுத்து கல் நடப்பட்ட இடங்களை அன்புமணி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, இந்தச் சாலையை வர விடமாட்டோம் என்று அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறுவிட்டுச் சென்றார்.

 

Leave a comment

Your email address will not be published.