ஜப்பானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் இறந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணி நடைபெறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
ஜப்பானின் 2-வது மிகப்பெரிய நகரான ஒசாகாவில், அந்நாட்டு நேரப்படி நேற்று காலை 8 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர். எனினும், இந்தப் பூகம்பத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதையடுத்து தீ மற்றும் பேரிடர் நிர்வாக அமைப்பைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சிறுமி 2 முதியவர்கள் என இதுவரை 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ன.
மேலும் காயமடைந்த 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறும்போது, “இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்க முன்னுரிமை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.