தகுதி நீக்கப்பட்ட 18 எம்எல்ஏக்கள் வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் விசாரிப்பார்: 3வது நீதிபதி விமலாவுக்கு பதில் நியமனம் விரைந்து முடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் ெசய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க, 3வது நீதிபதியாக எம்.சத்தியநாராயணனை நியமனம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் எனக்கோரி டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் ஆளுநரைச் சந்தித்து கடிதம் கொடுத்தனர்.இவர்களை தகுதி நீக்கம் செய்து பேரவைத்தலைவர் தனபால் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பு  வழங்கியது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில், பேரவைத் தலைவர் எடுத்த முடிவில் தவறு இருப்பதாக தெரியவில்லை. எனவே, 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து பேரவைத் தலைவர் எடுத்த முடிவு சரியானது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

நீதிபதி எம்.சுந்தர் அளித்த தீர்ப்பில், ‘‘பேரவைத் தலைவரின் உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது. முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது. மனுதாரர்களை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. பேரவைத் தலைவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு மட்டுமே. அதை குலைத்துவிடக் கூடாது. இந்த காரணங்களுக்காக பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’’  என்று கூறினார்.இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பளித்ததால், வழக்கின் முடிவை எட்ட 3 வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை நீதிபதி எஸ்.விமலா விசாரிப்பார் என்று நீதிபதி குலுவாடி ரமேஷ் உத்தரவிட்டார். இதற்கிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் தங்க தமிழ்ச்செல்வன் தான் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறப்போவதாக அறிவித்தார். ஆனால், இதுவரை அவர் எந்த முடிவையும் எடுக்கவில்லை.இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை வேறு மாநிலத்திற்கோ அல்லது உச்ச நீதிமன்றத்திற்கோ மாற்ற வேண்டும் எனக்கோரி தங்க தமிழ்ச்செல்வன் தவிர மற்ற 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து, தனது தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் எனக்கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. 17 எம்.எல்.ஏ.க்கள் சார்பாக மூத்த வக்கீல் விகாஸ் சிங், மோகன் பராசரன் ஆகியோர் ஆஜராகினர். சபாநாயகர், முதல்வர் சார்பில் அரிமா சுந்தரம், சி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, முதல்வர் எடப்பாடி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் அரிமா சுந்தரம், சி.எஸ்.வைத்தியநாதன் வாதிடும்போது, ‘‘பேரவைத் தலைவர் சட்ட விதிகளுக்கு உட்பட்டே 17 பேரையும் தகுதி நீக்கம் செய்துள்ளார். சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது’’ என்று வாதிட்டனர்.டிடிவி தரப்பில் மூத்த வக்கீல் விகாஸ் சிங் வாதிடும்போது, ‘‘பேரவைத் தலைவருக்கான அதிகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பேரவைத் தலைவர் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்ததை ஏற்க முடியாது’’ என்று திட்டார். அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், 3வது நீதிபதி மீது மனுதாரர்கள் எந்த அடிப்படையில் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். அவர் மீது நீங்கள் வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரம் உள்ளது. எந்த ஒரு நீதிபதியையும் ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டக் கூடாது. எனவே, 3வது நீதிபதி மீது வைத்த குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற வேண்டும்.

எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கை விசாரிப்பதற்காக 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி எஸ்.விமலாவுக்கு பதிலாக நீதிபதி எம்.சத்தியநாராயணன் நியமனம் செய்யப்படுகிறார். அவர் வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பளிப்பார் என்று உத்தரவிட்டனர். வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்ற 17 எம்எல்ஏக்களின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.மூத்த நீதிபதிகளில் 7வது இடம் உயர் நீதிமன்றத்தில் 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எம்.சத்தியநாராயணன் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிவில், மற்றும் கிரிமினல் வழக்குகளில் சிறந்து விளங்குபவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதிகள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார். இவரது தந்தை மீனாட்சிசுந்தரம் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி.
நீதிபதி சத்தியநாராயணன் கடந்த 2008 ஏப்ரல் மாதம்  உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2009 நவம்பரில் நிரந்தர நீதிபதியாக  நியமிக்கப்பட்டார். கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி  சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்பு அளித்துள்ளார்.  உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி எம்.சத்தியநாராயணன் அலுவலகத்திற்கு வழக்கு ஆவணங்கள் ஓரிரு நாட்களில் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு வழக்குக்கான விசாரணை நாள் அறிவிக்கப்பட்டு வழக்கு பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published.